சச்சின் பைலட், அசோக் கெலாட் file image
இந்தியா

ராஜஸ்தானில் முற்றும் காங்கிரஸ் மோதல்.. களமிறக்கப்பட்ட மூத்த தலைவர்கள்! தணியுமா கெலாட் - பைலட் பகை!

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையே மீண்டும் ஏற்பட்டிருக்கும் மோதலைத் தவிர்க்க, காங்கிரஸ் தலைமை கமல் நாத், கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்களைக் களமிறக்கி உள்ளது.

Prakash J

களத்தில் இறங்கிய மூத்தத் தலைவர்கள்!

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக ஜெய்ப்பூரில் கட்சித் தலைமையின் அறிவுரையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய சச்சின் பைலட் மீது நடவடிக்கை எடுத்தால், அதனால் பாதகமான விளைவுகள் ஏற்படும் என கவலை அடைந்துள்ள காங்கிரஸ் தலைமை, பிரச்னையை சுமுகமாகத் தீர்த்துவைக்க முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்தை களத்தில் இறக்கி உள்ளது.

கமல்நாத்

கமல் நாத் மற்றும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கான தலைவர்களில் ஒருவரான கே.சி.வேணுகோபால் ஆகியோர் கட்சித் தலைமையின் அறிவுரைப்படி சச்சின் பைலட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அசோக் கெலாட்டுடனும் பேச்சுவார்த்தை நடத்தி மோதலை முடிவுக்குக் கொண்டுவர இந்த இரண்டு தலைவர்களும் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியைவிட்டு வெளியேறும் சூழல் உருவானால், சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் பாதிக்கப்படும் என கட்சியில் ஒருசாரார் கருதுகிறார்கள். ஆகவே சச்சின் பைலட் விவகாரத்தில் நிதானமாகச் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். இதனால் காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் பொறுப்பாளர் ரன்தாவா உண்ணாவிரதப் போராட்டத்துக்குப் பிறகு பைலட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை அளித்தபோதும், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை, அத்தகைய நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை.

பிரியங்கா, ராகுல்

”சச்சின் பைலட் மீது நடவடிக்கை வேண்டாம்”

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் பேச்சுவார்த்தை மூலம் சச்சின் பைலட்டை சமாதானப்படுத்த வேண்டும் எனக் கருதுகின்றனர். இந்த வருடம் நடைபெற உள்ள ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் சச்சின் பைலட் முழு ஆதரவு இல்லாவிட்டால், காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியை சந்திக்க நேரிடும் எனக் கட்சியின் பல மூத்த தலைவர்கள் எச்சரித்துள்ளனர். இதனால்தான் கட்சித் தலைமையின் எச்சரிக்கையை மீறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பைலட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற அசோக் கெலாட் ஆதரவாளர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

கமல்நாத் மீது நம்பிக்கை வைக்கும் தலைமை!

கமல்நாத் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் என்பதால், அவரால் ராஜஸ்தான் பிரச்னையைத் தீர்த்துவைக்க முடியும் என காங்கிரஸ் கட்சி தலைமை நம்புகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் மத்தியப் பிரதேச முதல்வரான கமல் நாத், ஏற்கெனவே ஒருமுறை கெலாட் - பைலட் மோதலைத் தடுக்க பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த 2018ஆம் வருட சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறுவதற்கு, சச்சின் பைலட் செய்த பிரசாரமும் முக்கியப் பங்கு வகித்தது என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் அவருக்கு மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பொறுப்பு மற்றும் துணை முதல்வர் பதவி இரண்டும் வழங்கப்பட்டன.

சச்சின் பைலட், அசோக் கெலாட்

மோதலுக்கு இதுதான் காரணமா?

முதலமைச்சர் அசோக் கெலாட் அரசு மற்றும் கட்சியில் ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும், பைலட் ஆதரவாளர்களுக்கு போதிய வாய்ப்பு அளிக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் 2020ஆம் ஆண்டுமுதல் அவர்கள் இருவருக்கிடையே மோதல் தீவிரமான சூழலில், பைலட் பாஜகவுக்கு தாவிவிடுவாரோ என சந்தேகங்கள் எழுந்தன. காங்கிரஸ் எம்எல்ஏக்களை தன்னுடன் கட்சியைவிட்டு வெளியேற்றி அரசைக் கலைக்கப் பார்க்கிறார் என கெலாட் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர். அரசுக்கு எதிராக செயல்படும்படி சட்டமன்ற உறுப்பினர்களை பைலட் விலைக்கு வாங்க முயற்சிக்கிறார் என கெலாட் கட்சியின் தேசிய தலைமைக்குப் புகார் அளித்தார்.

இதுவரை பைலட்டுக்கு எந்த முக்கியப் பொறுப்பும் அளிக்கப்படவில்லை

இதைத் தொடர்ந்து சச்சின் பைலட், துணை முதல்வர் பதவி மற்றும் காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் மாநில தலைவர் பதவி இரண்டையும் ராஜினாமா செய்தார். கட்சியின் தேசிய தலைமை அறிவுரைப்படி இத்தகைய நடவடிக்கையை அவர் எடுத்துள்ளார் என்றும், விரைவில் பைலட்டுக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமையில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படும் எனவும் கட்சித் தலைவர்கள் தெரிவித்து வந்தனர். ஆனால் இதுவரை பைலட்டுக்கு எந்த முக்கியப் பொறுப்பும் அளிக்கப்படவில்லை என்பதுடன் கட்சியில் படிப்படியாக அசோக் கெலாட்டின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய பின்னணியில் தற்போது கெலாட் - பைலட் மோதல் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது. ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், பிரச்னையை சுமுகமாகத் தீர்க்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் கமல் நாத் மற்றும் ராகுல் காந்திக்கு நெருக்கமானவரான கே.சி.வேணுகோபால் ஆகியோர் தற்போது சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

கணபதி சுப்ரமணியம்