இந்தியா

சபரிமலை வழக்கு: கடந்து வந்த பாதை

சபரிமலை வழக்கு: கடந்து வந்த பாதை

jagadeesh

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான சீராய் மனு மீது உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. இந்த வழக்கு கடந்து வந்த பாதையை தெரிந்துக்கொள்ளலாம்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க உத்தரவிடக்கோரி 2006 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இதனைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்‌டன. மனுக்களை விசாரித்த நீதிமன்றம், திருவிதாங்கூர் தேவஸ்தானத்துக்கும், கேரள அரசுக்கும்‌ நோட்டீஸ் அனுப்பியது. கேரளாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால்‌ உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தரப்பில் மாறுபட்ட நிலைபாடுகள் தெரிவிக்கப்பட்டன. 

இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த வழக்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், D.Y. சந்திரசூட், ஏ.எம். கன்வில்கர், இந்து மல்ஹோத்ரா ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. ‌இந்தச் சூழலில் கடந்த ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி பெண்களை சபரிமலையில் அனுமதிக்கும் விவகாரத்தில் நீதிமன்றத்தில் கேரள அரசு சாதகமான பதில் அளித்தது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கி ஏழு நாட்களுக்கு அரசியல் சாசன அமர்வு தினசரி அடிப்படையில் விசாரணை நடத்தியது. 

அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அனைத்து வயது பெண்களும் சபரிமலையில் வழிபடலாம் என்று அதிரடியாக உத்தரவிட்டது. இதற்கு இந்து அமைப்புகள் உள்பட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். எனினும் காவல்துறையினர் பாதுகாப்புடன் கேரளாவைச் சேர்ந்த பிந்து, கனகதுர்க்கா ஆகிய இரண்டு பெண்கள் கடந்த ஜனவரி 2ஆம் தேதி சபரிமலை சன்னிதானத்தில் சாமி தரிசனம் செய்தனர். இவர்கள் கோரிக்கையை ஏற்று இரண்டு பெண்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க கேரள அரசுக்கு ஜனவரி 18ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதனிடையே தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி பல்வேறு நாள்களில் நாடு முழுவதும் இருந்து மொத்தம் 65 சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை‌ விசாரித்து வந்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு‌ பிப்ரவரி 6ஆம் நாளில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது. இவ்வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் பாலி நாரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளிக்கின்றது.