பெண்களை சபரிமலை கோயிலில் அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்யக் கோரி கேரளாவில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 28ஆம் தேதி வரலாற்றுத் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்போவதாக சபரிமலை தேவஸம் போர்டு தெரிவித்தது. இதனையடுத்து பெண்களை அனுமதிக்கு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸம் போர்டின் தலைவர் பத்மகுமார் தெரிவித்தார். இதனிடையே,கேரள முதல்வர் பினராயி விஜயன், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதில்லை என்று தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து சபரிமலை கோயிலுக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பும், வசதியும் செய்து கொடுக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் விதமாக கேரள அரசும், தேவசம் போர்டும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள், பெண்களுக்கான வசதிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் இதனை கண்டித்தும், மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வலியுறுத்தியும் கேரளாவில் போராட்டங்கள் வலுத்துவருகின்றன. இருப்பினும் வரும் 17 ஆம்தேதி நடைதிறக்கப்படும்போது பெண்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்று கேரள அரசு கூறியுள்ளது.
இந்தச் சூழலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்யக் கோரி, கடந்த 10 ஆம் தேதி பந்தளம் பகுதியில் இருந்து தலைமைச்செயலகத்தை முற்றுகையிடும் பேரணி தொடங்கியது. ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்தப் பேரணி நேற்று திருவனந்தபுரம் வந்து சேர்ந்தது. இதில் பெண்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இந்நிலையில் திருவனந்தபுரத்தின் பட்டோம் பகுதியில் இருந்து தலைமைச்செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று காலை தொடங்கியது. பாரதிய ஜனதா மாநிலத்தலைவர் ஸ்ரீதர்பிள்ளை தலைமையில் எம்பி சுரேஷ்கோபி மற்றும் பாரதிய ஜனதா கூட்டணித்தலைவர்கள், ஏராளமான பெண்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.
ஐயப்ப சரண கோஷங்களை எழுப்பியபடி வந்த பேரணி, கேரள தலைமைச் செயலக வாயிலில் முடிவடைந்தது. அங்கு ஐயப்ப சரணகோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள் மத்தியில் பாரதிய ஜனதா தலைவர்கள் உரையாற்றினர். அதில் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் அதற்கு ஊக்கமளிக்கிறார்கள். ஆனால், நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றார். இதனையடுத்து இப்பிரச்னை குறித்து விவாதிக்க தேவஸம் போர்டு, நாளை அவசர கூட்டத்தைக் கூட்டியுள்ளது. இதில் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், சபரிமலை தந்திரி குடும்பம் உள்ளிட்டோர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.