இந்தியா

கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் சம்மன் 

கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் சம்மன் 

webteam

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தன்னை நாளை காலை சந்திக்குமாறு கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் சம்மன் அனுப்பியுள்ளார். 

கர்நாடகாவில் ஆளும் கூட்டணியை சேர்ந்த 15 அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ள நிலையில் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜினாமா கடிதம் கொடுத்தும் சபாநாயாகர் ஏற்கவில்லை என அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதற்கு விளக்கம் கொடுத்த சபாநாயகர் எம்.எல்.ஏக்கள் என்னை நேரில் சந்தித்து கடிதத்தை கொடுக்கவில்லை. என்னை நேரில் சந்தித்து விளக்கம் கொடுத்தால் நான் பரிசீலிப்பேன் என தெரிவித்திருந்தார். 

இதையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சபாநாயகரை நேரில் சந்திக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்படி அவர்கள் சபாநாயகர் ரமேஷ்குமாரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதங்களை கொடுத்தனர். இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வந்தபோது சபாநாயகரை ராஜினாமாவை ஏற்கும்படி நாங்கள் உத்தரவிட முடியாது எனவும் அதே சமயத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிருப்தி எம்.எல்.ஏக்களை கலந்து கொள்ளுமாறு வற்புறுத்த யாருக்கும் உரிமை இல்லை எனவும் தெரிவித்தது. 

இதுகுறித்து விளக்கம் தேவை என உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் நாளை காலை 11 மணிக்கு தன்னை சந்திக்க வேண்டும் என சபாநாயகர் ரமேஷ் குமார் சம்மன் அனுப்பியுள்ளார்.