தமிழகத்தில் ஆணவக்கொலை நடக்கிறதா என உச்சநீதிமன்ற நீதிபதி பாப்டே கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாச்சலம் & சித்ரா தம்பதியின் மகன் கோகுல்ராஜ் (23). இன்ஜினியரிங் பட்டதாரி. கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்த தன்னுடன் படித்து வந்த மாணவி சுவாதி என்பவருடன் நெருங்கிப் பழகி வந்ததால் கோகுல்ராஜ் ஆணவக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.
இதில் யுவராஜ் என்பவர் ஜாமின் கோரி உச்சநீதிமன்றம் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, “தமிழகத்தில் ஆணவக்கொலையா? ஹரியானா மற்றும் உத்திரபிரதேசத்தில்தான் ஆணவக்கொலைகள் நடக்கும் என நினைத்திருந்தோம்” எனத் தெரிவித்தார். மேலும் யுவராஜூவுக்கு ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.