இந்தியா

அமைச்சர் உதவியாளர் வீட்டில் பதுக்கப்பட்டிருந்த ரூ.20 கோடி ரொக்கம் - அதிகாரிகள் அதிர்ச்சி

அமைச்சர் உதவியாளர் வீட்டில் பதுக்கப்பட்டிருந்த ரூ.20 கோடி ரொக்கம் - அதிகாரிகள் அதிர்ச்சி

ஜா. ஜாக்சன் சிங்

முறைகேடு புகாரில் சிக்கிய மேற்கு வங்க அமைச்சரின் உதவியாளரின் வீட்டில் கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.20 கோடி ரொக்கத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, அம்மாநிலத்தில் தொழில்துறை அமைச்சராக இருக்கும் பார்த்தா சாட்டர்ஜி மீது அண்மையில் முறைகேடு புகார் எழுந்தது. பார்த்தா சாட்டர்ஜி பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்த போது, ஆசிரியர்களை நியமிக்க கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக கூறப்பட்டது.

இதையடுத்து, இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத்துறை அண்மையில் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் வீடுகள், அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த வாரம் சோதனை மேற்கொண்டனர். இதில் வழக்குக்கு தேவையான பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், அமைச்சர் பார்த்தாவுக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படும் பெண் உதவியாளர் அர்பித்தா முகர்ஜி என்பவரின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் பல இடங்களில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து, மொத்த பணத்தையும் அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். 500, 2000 ரூபாய் நோட்டுகள் என பணம் மூட்டை மூட்டையாக இருந்ததால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் அதனை எண்ண முடியவில்லை.

இதையடுத்து, வங்கி ஊழியர்களையும், பணம் எண்ணும் இயந்திரங்களையும் எடுத்து வந்து ரூபாய் நோட்டுகள் எண்ணப்பட்டன. இதில் மொத்தம் ரூ.20 ரொக்கம் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக, அந்தப் பணத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த பணம் யாவும் ஆசிரியர்கள் நியமனத்தின் மூலம் பெறப்பட்டது என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

'பழிவாங்கும் நடவடிக்கை'

இதனிடையே, அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மீது பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கு ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என திரிணமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.