கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக கேரளா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரபல சவுண்ட் இன்ஜினியர் ரசூல் பூக்குட்டி ஆதங்கம் கலந்த கோபத்துடன் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ நெருங்கியுள்ளது. பலர் உண்ண உணவு கிடைக்காமலும், வீடுகளை வெள்ளத்திற்கு பறிகொடுத்தும் தவித்து வருகின்றனர். வீடுகளை இழந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ரயில் மற்றும் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொச்சி விமான நிலையம் முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் கொச்சி விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்புகள் குறித்து பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி நாளை கேரளா செல்கிறார்.
இந்நிலையில் கேரள நிலைமை குறித்து பிரபல சவுண்ட் இன்ஜினியர் ரசூல் பூக்குட்டி ஆதங்கம் கலந்த ஏக்கத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கொச்சி விமான நிலையம் நீரில் மூழ்கி இருக்கும் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ள அவர், “மை டியர் தேசிய ஊடகங்களே இதுதான் கொச்சி விமான நிலையத்தின் தற்போதைய நிலை. கேரள வெள்ளம் தொடர்பாக ஏதாவது ஐடியா இருக்கிறதா..? இல்லையென்றால் இப்போதும் கூட இது தேசிய பேரழிவு இல்லையா..? என் கேரள சொந்தங்களே. நாமே நம் பிரச்னையை சமாளித்துக் கொள்வோம். ஜெய் ஹிந்த்.” என தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் பிறந்த பிரபல சவுண்ட் இன்ஜினியரான ரசூல் பூக்குட்டி தமிழ், மலையாம், ஹாலிவுட் உள்பட பல படங்களில் சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றியுள்ளார். கடந்த 2009, 2016-ஆம் ஆண்டு இவர் ஆஸ்கர் விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.