இந்தியா

கொலை வழக்கில் திருப்பம் - புதைக்கப்பட்ட உடலைக் கண்டறிந்த 'மோப்ப நாய் ஜெனி'

கொலை வழக்கில் திருப்பம் - புதைக்கப்பட்ட உடலைக் கண்டறிந்த 'மோப்ப நாய் ஜெனி'

jagadeesh

மஷ்ரூம் ஹட் ரிசார்ட்டில் நடந்த கொலை, இடுக்கி மாவட்டம் சாந்தம் பாறையை உலுக்கிக்கொண்டிருக்கிறது. அந்த ரிசார்ட்டில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்த ரிஜோஷை காணவில்லை என்று பெற்றோர் புகார் அளித்த நிலையில், அடுத்த 6 நாட்களில் அவரது மனைவி லிஜி, தனது 2 வயது மகனுடன் காணாமல் போனார்.

ரிஜோஷ் வேலை பார்த்த ரிசார்ட்டின் மேலாளர் வாசிம் அப்துல் காதரும் காணாமல் போனபோதுதான் லிஜிக்கும், அவருக்கும் திருமண உறவை மீறிய தொடர்பு இருப்பது தெரியவந்தது. காணாமல் போன ரிஜோஷ் என்னவானார் என்று அறிவதற்காக கொண்டுவரப்பட்டதுதான் ஜெனி என்கிற மோப்பநாய்.

உதவி ‌ஆய்வாளர் அந்தஸ்தில் இருக்கும் ஜெனிக்கு வயது நான்கு. இந்த ஜெனிதான் காணாமல் போனவர் குறித்த வழக்கை கொலை வழக்காக மாற்றுவதற்கு காரணம் எனலாம். ரிஜோஷை தேட அழைத்துச் சென்ற காவல்துறையினரை ஒன்றரை கிலோமீட்டர் தூரம் வரை இட்டுச் சென்ற ஜெனி, ரிஜோஷ் பணிபுரிந்த ரிசாட்டிற்கு சென்றது. அங்கு ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் புதிதாக மண் நிரப்பப்பட்ட இடத்தை தனது கால்களால் தோண்டி அடையாளம் காட்டியது ஜெனி. அங்கு தோண்டியபோது சாக்கில் மூட்டையாக கட்டப்பட்டு புதைக்கப்பட்ட ரிஜோஷின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

தலைமறைவாக இருந்த வாசில் அப்துல்காதரும், லிஜியும் மும்பை விடுதி ஒன்றில் விஷம் அருந்திய நிலையில் கிடந்ததும், இரண்டரை வயது குழந்தை விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டிருப்பதும் காவல்துறைக்கு தெரியவந்துள்ளது. தேட ஆரம்பித்த நாளிலேயே உண்மையை வெளிக்கொண்டு வர உதவியுள்ள மோப்ப நாய் ஜெனிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.