டெல்லி செங்கோட்டைக் கலவரம் தொடர்பாக பஞ்சாப் நடிகர் தீப் சித்து மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் கடந்த 26ஆம் தேதி குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணி நடத்தினர். இதில், பஞ்சாப் நடிகரான தீப் சித்து தனது ஆதரவாளர்களுடன் கலந்துகொண்டார். இவர்களை விவசாய சங்கத்தினர் சேர்த்துக் கொள்ளவில்லை. பேரணியை முன்கூட்டியே தொடக்கிய தீப் சித்து, டிராக்டர் பேரணிக்கு அனுமதி கொடுத்த வழிகளில் செல்லாமல் காவல் துறையினரின் தடுப்புகளை மீறி செங்கோட்டை வரைச் சென்றார்.
செங்கோட்டைக்குள் சீக்கிய மதக்கொடியை ஏற்றியது சர்ச்சையான நிலையில், அதனை தன் ஆதரவு விவசாயிகள்தான் ஏற்றியதாக தீப் சித்து ஒப்புக்கொண்டார்.
இதுதொடர்பாக, தீப் சித்து மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது டெல்லி வடக்கு மாவட்டத்தில் உள்ள கோத்வாலி காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியரை தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.