இந்தியா

“மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகைகளை மீண்டும் அமல்படுத்துக”- ரயில்வே நிலைக்குழு

“மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகைகளை மீண்டும் அமல்படுத்துக”- ரயில்வே நிலைக்குழு

webteam

ரயில்களில் மூத்த குடிமக்கள் பயணம் செய்வதற்கான கட்டண சலுகைகளை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என ரயில்வே அமைச்சகத்திற்கு ரயில்வேத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.

ரயில்வேக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவர் ராதாமோகன் சிங் தலைமையிலான ரயில்வேத்துறை நாடாளுமன்ற நிலைக்குழு ரயில்வே அமைச்சகத்திற்கு பரிந்துரை ஒன்றை அளித்துள்ளது.

அந்த பரிந்துரையின்படி படுக்கை வசதி உள்ள ஸ்லீப்பர் பெட்டிகள் மற்றும் மூன்று அடுக்கு குளிர்சாதன பெட்டிகளில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு உடனடியாக கட்டண சலுகை வசதியை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் கட்டண சலுகை மூலம் சாமானிய மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என்றும் அந்த பரிந்துரை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



முன்னர் ரயில்களில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு 40 முதல் 50% வரை கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது. கொரோனா காலகட்டத்தின்போது அச்சலுகை நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது நிலைமை சீரான பின்னும் அதே நிலையே இன்னும் நீடித்து வருகிறது.

இதையடுத்து நாடெங்கும் உள்ள பல்வேறு ரயில் பயணிகள் நலச்சங்கங்களும் மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் முன்னர் அமலில் இருந்த சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என அரசை வலியுறுத்தியிருந்தன. எனினும் மூத்த குடிமக்களுக்கான சலுகை மூலம் ஆண்டுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவாவதாக மத்தியஅரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மீண்டும் மூத்த குடிமக்களுக்கான சலுகையை அமல்படுத்த வேண்டும் என ரயில்வே அமைச்சகத்துக்கு ரயில்வேத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.