இந்தியா

டீ ஓகே... ரசகுல்லா ஓகே.. அது என்ன ரசகுல்லா டீ? இணையத்தை தெறிக்கவிடும் புது டிஷ்!

டீ ஓகே... ரசகுல்லா ஓகே.. அது என்ன ரசகுல்லா டீ? இணையத்தை தெறிக்கவிடும் புது டிஷ்!

Sinekadhara

நமது அன்றாட வழக்கங்களில் ஒன்றாகவே கலந்திருக்கிறது டீ. கையில் ஒரு கப் டீ இல்லாமல் பலரின் நாளே தொடங்காது. அந்த அளவுக்கு இந்தியர்களும் நமது பாரம்பரிய டீயும் ஒன்றிப்போயுள்ளது. சிலருக்கு பால் அதிகமாக சேர்த்த டீ பிடிக்கும், சிலருக்கு சர்க்கரை குறைவான டீ பிடிக்கும். இப்படி டீயின் சுவையும் நபருக்கு நபர் வேறுபடும்.

அவ்வப்போது புதிய வகை முயற்சியில் உருவான உணவுப்பொருட்கள் சில இணையத்தை தெறிக்கவிடுவதுண்டு. அந்த வகையில் தற்போது ஒரு புதுவித டீ இணையத்தில் பலரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது. டீ சாப்பிட்டு இருக்கிறோம். ரசகுல்லா சாப்பிட்டு இருக்கிறோம். ஆனால் ரசகுல்லா டீ? கேட்பதற்கே புதிதாக இருக்கிறதல்லவா? கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு தெருவோர டீக்கடைக்காரர் தான் இந்த புதுவித டீயை அறிமுக செய்து இணையத்தை அசத்திவருகிறார்.

@kolkatadelites என்ற உணவு ப்ளாகர் வீடியோ ஒன்றை அப்லோடு செய்துள்ளார். அதில் அந்த கடைக்காரர் எப்போதும்போல டீ தயார் செய்கிறார். பின்னர் ஒரு சிறிய மண் குவளையில் ரசகுல்லாவை போட்டு அதன்மீது சூடான டீயை ஊற்றுகிறார். பின்னர் அதன்மீது சிறிது நெய்யை ஊற்றி அலங்கரிக்கிறார்ட். சிறிது நேரத்தில் அந்த ரசகுல்லா டீயில் நன்றாக ஊறிவிடுகிறது.

இந்த வீடியோவை அப்லோடு செய்ததிலிருந்து 7.48 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். கிட்டத்தட்ட 12 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோவிற்கு பலதரப்பட்ட கமெண்டுகளும் வந்தவண்ணம் இருக்கிறது. ’’இதைப் பார்த்து என் மனநிலை பாழாகிவிட்டது’’, ‘’தண்ணீருடன் உப்பும், மிளகாயும் சேர்த்து தரும் நாட்கள் சீக்கிரம் வரும்’’ என்பன போன்ற எதிர்மறை கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.

அதேசமயம் மற்றொருபுறம், ‘’தனித்துவமானது’’, ’’சுவாரஸ்யமானது’’, ’’30 வருடங்களுக்கு முன்பே எனது தாத்தா இந்த உணவு வகையை கண்டுபிடித்துவிட்டார். இவர் இப்போதுதான் செய்கிறார்’’ என்பன போன்ற கருத்துகளும் பதிவிடப்பட்டு வருகின்றன.