இந்தியா

தூங்காமல் வாகனம் ஓட்ட இளைஞர் கண்டுபிடித்த "ஸ்பெஷல்" கண்ணாடி

தூங்காமல் வாகனம் ஓட்ட இளைஞர் கண்டுபிடித்த "ஸ்பெஷல்" கண்ணாடி

webteam

சாலையில் விபத்து ஏற்படுவதை தவிர்க்க பள்ளி மாணவர் ஒருவர் புதிய வகை மூக்கு கண்ணாடியை கண்டுபிடித்துள்ளார். 

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியை சேர்ந்தவர் பிரத்யூஷ் சுதாகர்(16). இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் தற்போது 11 வகுப்பு படித்து வருகிறார். இவர் சாலையில் விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க உதவும் வகையில் சிறப்பு மூக்கு கண்ணாடி ஒன்றை தயாரித்து உள்ளார். இதுகுறித்து அவர் ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ தளத்திற்கு பேட்டியளித்துள்ளார். 

அதில், “இந்த மூக்கு கண்ணாடியை வாகனத்தை ஓட்டுபவர் அணிந்து கொள்ளவேண்டும். அவர் வாகனத்தை இயக்கும் போது தூங்காமல் இந்தக் கண்ணாடி பார்த்து கொள்ளும். ஏனென்றால் இந்தக் கண்ணாடியின் இடது பகுதியில் இன்ஃப்ராரெட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் இரண்டு எல்.இ.டி பல்ப்களும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எல்.இ.டி பல்ப்களின் மூலம் இன்ஃப்ராரெட் கதிர்வீச்சு உருவாக்கப்படும். அது நமது கண் விழிகளில் பட்டு பிரதிபலிக்கும் போது அது போட்டோ டையோடு மீது பட்டு சிக்னல் உருவாக்கும். இதன்மூலம் ஒரு அதிர்வு ஏற்படும் எனவே ஓட்டுநர் தூங்காமல் விழித்து இருப்பார். இந்த மூக்கு கண்ணாடியை தயாரிக்க எனக்கு 6 மாதங்கள் எடுத்தது” எனத் தெரிவித்துள்ளார். 

லக்னோவிலுள்ள மத்திய வழித்தட ஆராய்ச்சி மையம் (Central Route Research Centre) ஆய்வின்படி 20 சதவிகித சாலை விபத்துகள் ஓட்டுநர்களின் தூக்கத்தாலேயே நிகழ்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.