இந்தியா

பசுக்களை பராமரித்தால் அரசு கெளரவம் - ராஜஸ்தான் அமைச்சர் அறிவிப்பு

பசுக்களை பராமரித்தால் அரசு கெளரவம் - ராஜஸ்தான் அமைச்சர் அறிவிப்பு

webteam

சாலைகளில் திரியும் பசுக்களை பராமரிப்பவர்களுக்கு சுதந்திர மற்றும் குடியரசுத் தினத்தன்று அரசு கெளரவம் அளிக்கப்படும் என ராஜஸ்தான் பசு பாதுகாப்புத் அமைச்சர் பிரமோத் ஜெயின் பாயா தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் பசு உள்ளிட்ட மாடுகளின் நலனை பாதுகாப்பதற்கு முன்னாள் பாஜக முதலமைச்சர் வசுந்தரா ராஜி ஆட்சிக்காலத்தின் போது பசு பாதுகாப்புத்துறை என்ற ஒரு புதிய துறை அமைச்சரவையில் தொடங்கப்பட்டது. அதற்காக நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பசு பாதுகாப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் அண்மையில் முடிந்த 5 மாநில தேர்தல்களில், ராஜஸ்தான் மாநிலத்தையும் காங்கிரஸ் கைப்பற்றி ஆட்சியமைத்தது. 

காங்கிரஸ் அமைச்சரவையில் பசு பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவி பிரமோத் ஜெயினுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவர் அமைச்சர் ஆகிய பிறகு அந்தத் துறையின் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சாலையில் திரியும் பசுக்களை பாதுகாக்க கூடுதல் திட்டங்கள் வகுக்கப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது, காங்கிரஸ் தெரிவித்திருந்தது. அதன்படியே, தற்போது புதிய அறிவிப்பை அந்தத் துறையின் அமைச்சரான பிரமோத் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, “பசுக்களை நேர்மையாக பாதுகாப்பவர்களை தேர்வு செய்து குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று கெளரவிக்கவுள்ளோம். பசுக்களை நேர்மையாக பாதுகாப்பவர்களை ஊக்குவிப்பதற்காக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். அத்துடன் ஆதரவற்ற பசுக்களுக்கு மற்றவர்கள் உதவுவதை மேம்படுத்த இது உதவும். தங்களது இந்தத் திட்டத்தில் மக்கள் இணைந்து பணியாற்றவும் நாங்கள் வலியுறுத்தவுள்ளோம். புனிதமான பசுக்களை பாதுகாப்பதே எனது இலக்காகும். அனைத்து கடவுளும், கடவுளின் தேவிகளும் பசுக்களில் இருப்பதை இந்து மதம் கூறுகிறது. எனவே பதுக்களை பாதுகாப்பது நமது பொறுப்பாகும்” என்றார்.