வடமாநிலங்களில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது.
இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஓடும் யமுனை நதியில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இமாச்சல் பிரதேசத்தில் மழை வெள்ளத்தில் மேலும் மூன்று பேர் உயிரிழந்திருப்பதை அடுத்து, பலி எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. அண்டை மாநிலமான உத்தராகண்டிலும் இருவரது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டருப்பதால், உயிரிழப்பு 12 ஆக அதிகரித்துள்ளது. பெருமழை காரணமாக உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள 12க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வேளாண் நிலங்களும் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன.
பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலும் நிலைமை மோசமடைந்து வருகிறது. அங்கு வெள்ளத்தில் சிக்கி தவித்த ஒன்பது பேரை இந்திய விமானப் படையினர் பத்திரமாக மீட்டனர். ரூப்நகர் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருவதால், அங்கு மீட்புப் பணிகளை மேற்கொள்ள ராணுவத்தினரும், பேரிடர் மீட்பு படையினரும் விரைந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்திலும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.