இந்தியாவிலிருந்து கடந்த 5 ஆண்டுகளில் 7 பன்னாட்டு நிறுவனங்கள் வெளியேறியுள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
செவர்லே, மேன் டிரக்ஸ், யுனைட்டட் மோட்டார்ஸ், ஹார்லி டேவிட்சன், ஃபோர்டு, ஃபியட் , டாட்சன் ஆகிய 7 பன்னாட்டு நிறுவனங்கள் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் தங்கள் ஆலையை மூடியுள்ளதாக ராகுல் காந்தி தன் பதிவில் தெரிவித்துள்ளார். இதனால் 9 ஆலைகள் மூடப்பட்டுள்ளதுடன் 649 விநியோகஸ்தர்களின் கடைகள் மூடப்பட்டு 84 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை பிரச்னை குறித்து பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் ’மேக் இன் இந்தியா’ திட்டத்தை அரசு செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்ட ராகுல் காந்தி, அதே நேரம் வெறுப்புணர்வு மிக்க இந்தியாவும் அதாவது ஹேட் இன் இந்தியாவும் மேக் இன் இந்தியாவும் ஒரே தளத்தில் இருக்கமுடியாது என்றும் குறிப்பிட்டார்.