முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து பிரதமர் மோடி கூறிய கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி "எனது மதிப்பை குறைப்பதற்காகவே ராகுல் காந்தி ரஃபேல் விவகாரத்தில் என்னை ஆதாரமின்றி குற்றஞ்சாட்டி வருகிறார். ஆனால் உங்கள் தந்தை, ராஜீவ் காந்தி நேர்மையானவர் என்று கூறுவார்கள். ஆனால் அவர் ஊழலில் நம்பர் ஒன்னாக மாறினார்" என்று கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்து பேசினார். மேலும் தொடர்ந்த மோடி " எனது செல்வாக்கை சிதைத்து, என்னை சிறுமைப்படுத்த நினைப்பவர்கள், நாட்டில் நிலையற்ற, பலவீனமாக அரசு அமைய வேண்டும் என விரும்புகிறார்கள். என தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் பேச்சுக்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,போர் முடிந்துவிட்டது. உங்களது கர்மா உங்களுக்காக காத்திருக்கிறது. என் தந்தையைப் பற்றிய உங்கள் உள்நம்பிக்கைகளை பரப்புவது எந்த விதத்திலும் உங்களை பாதுகாக்காது என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து பிரதமர் மோடி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பதில் அளித்து ட்வீட் செய்திருந்தார். அதில் மோடி எதையும் படிப்பதில்லை என நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.