மோடி என்ற குடும்ப பெயர் குறித்து அவதூறு கருத்து பேசியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு ஜாமின் வழங்கி பாட்னா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது, மோடி என்ற குடும்ப பெயர் கொண்டுள்ள அனைவரும் திருடர்களாக ஏன் இருக்கிறார்கள் என ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். பலகோடி ரூபாய் வங்கி மோசடி செய்த நிரவ் மோடி, ஐபிஎல் போட்டி நடத்தியதில் நிதி முறைகேடு செய்த லலித் மோடி உள்ளிட்டோருடன் பிரதமர் நரேந்திர மோடியையும் மறைமுகமாக குறிப்பிடும் வகையில் ராகுல் பேசியிருந்தார்.
இதைக் கண்டித்து, பீகார் துணை முதலமைச்சர் சுஷில்குமார் மோடி, பாட்னா மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ராகுலுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இன்று ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
இதனையடுத்து நீதிமன்றத்தின் வெளியே வந்த ராகுல் காந்தி, “யாரெல்லாம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் நரேந்திர மோடிக்கு எதிராக இருக்கிறார்களோ அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வருகிறது. அரசியலமைப்புச் சட்டத்தை நான் எப்போதும் போராடுவேன். அத்துடன் ஏழை எளிய மக்கள் மற்றும் விவசாயிகள் ஆகியவர்களின் நலனுக்காகவும் நான் போராடுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.