செய்தியாளர்: நிரஞ்சன் குமார்
கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பஞ்சாப் மாநிலத்தின் 36-வது ஆளுநராக பொறுப்பேற்ற பன்வாரிலால் புரோகித், இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். குடியரசுத் தலைவருக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில், தனிப்பட்ட காரணங்களுக்காகவும், வேறு சில கடமைகள் இருப்பதால் தன்னுடைய ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் அதனை ஏற்றுக்கொள்ளும்படியும்" குடியரசுத் தலைவரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
பஞ்சாப் மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே ஆளுநரை நீக்கம் செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பஞ்சாப் மாநில அரசு வழக்கு தொடர்ந்தது. ஆனால், மாநில அரசும் ஆளுநரும் பேசி சுமூக முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுரை கூறியிருந்தது.
அதன் பிறகும் ஆளுநர் மற்றும் மாநில அரசுக்கு இடையிலான மோதல் போக்கு தொடர்ந்து வந்தது. இந்தநிலையில் தற்போது திடீரென ஆளுநர் பதவியில் இருந்து பன்வாரிலால் புரோகித் ராஜினாமா செய்திருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் தமிழ்நாடு ஆளுநராக இருந்தபோதும் அரசுடன் கடுமையான மோதல் போக்கு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.