இந்தியா

கணவருக்கு வாட்ஸ்ஆப் மூலம் சம்மன் ! மனைவிக்கு புனே நீதிமன்றம் அனுமதி

கணவருக்கு வாட்ஸ்ஆப் மூலம் சம்மன் ! மனைவிக்கு புனே நீதிமன்றம் அனுமதி

Rasus

கணவருக்கு வாட்ஸ்ஆப் மூலம் சம்மன் வழங்க புனே நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் புனே குடும்ப நல நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், திருமணத்திற்கான பரஸ்பர உரிமைகள் மீறப்பட்டிப்பதாக தனது கணவர் மீது புகார் தெரிவித்திருந்தார். இதற்காக முறைப்படி சம்மனை வழங்க அனைத்து வழிகளிலும் கணவரை தொடர்பு கொள்ள முயற்சித்தபோதும், வெளிநாட்டில் வேலை செய்து வரும் அவர் இதுவரை அதனை பெற்றுக்கொள்ளவில்லை என குறிப்பிட்டிருந்தார். மெசேஜ், தொலைபேசி அழைப்பு ஆகியவற்றிற்கும் உரிய பதில் இல்லை என கூறியிருந்தார்.

இதனையடுத்து கணவருக்கு வாட்ஸ்ஆப் மூலம் சம்மன் வழங்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள் வாட்ஸ்ஆப் வழியாக சம்மன் வழங்க அனுமதி அளித்து உத்தரவிட்டனர். அனைத்து பராம்பரிய முறைப்படியும் சம்மன் வழங்க முயற்சி மேற்கொண்ட போதும் அதனை கணவர் ஏற்காத நிலையில் வாட்ஸ் ஆப் வழியாக கணவருக்கு சம்மன் வழங்க பெண்ணுக்கு  நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக பேசிய பெண்ணின் வழக்கறிஞர், நீதியை விரைந்து நிலைநாட்டும் பொருட்டு, நவீன தொழில்நுட்பத்தை ஏற்க நீதிமன்றங்கள் தயாராக இருப்பதாக கூறினார்.

மகாராஷ்டிராவை சேர்ந்த பெண்ணுக்கும் லண்டனை சேர்ந்த ஆணுக்கும் கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பின் அப்பெண் லண்டனில் வாழ்ந்தாலும் கூட, கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினர் வரதட்சனை கேட்டு அப்பெண்ணை சித்ரவதை செய்ததாக தெரிகிறது. இதனையடுத்து கணவரின் நிர்பந்தத்தில் பேரில் அவர் கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனையடுத்து பெற்றோருடன் வாழ்ந்து வரும் அப்பெண் பல முறை கணவரை சந்திக்க முயற்சித்திருக்கிறார். ஆனால் பலன் இல்லை. அத்துடன் இருவருக்கும் எந்த உறவும் இல்லையென்று கணவர் சொல்லிவிட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அப்பெண் நீதிகேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில் வாட்ஸ்ஆப் மூலம் சம்மன் அனுப்ப புனே நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.