இந்தியா

புதுச்சேரியில் அரசியல் சிக்கல்: மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜினாமா!

புதுச்சேரியில் அரசியல் சிக்கல்: மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜினாமா!

EllusamyKarthik

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் தற்போது காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் நான்கு பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்திருந்தனர். அதையடுத்து புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசை சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில் இன்று ஆளும் காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜ்பவன் சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் ராஜினாமா செய்துள்ளார். அவர் புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்களில் ஒருவரும் கூட. முன்னாள் கல்வித்துறை அமைச்சராகவும் அவர் இருந்துள்ளார். தனக்கு கட்சியில் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படாத காரணத்தால் அதிருப்தியில் இருந்ததாக தெரிகிறது. இதன் மூலம் தற்போது காங்கிரஸ் கூட்டணி அரசின் பலம் 13 ஆக உள்ளது. 

“என்னால் ஆட்சி கவிழவில்லை. எனக்கு கட்சியில் மரியாதை கொடுக்காததால் தான் இந்த முடிவு” என அவர் தெரிவித்துள்ளார். தற்போது எதிர்க்கட்சி தரப்பு எம்.எல்.ஏக்களின் பலம் 14 என உள்ளது.