கர்நாடகாவில் பாஜக இளைஞரணி நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் தக்ஷின் கன்னடா மாவட்டத்தில் உள்ள பெல்லாரே கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன் நெட்டாரு (26). இவர் பாஜக இளைஞரணி நிர்வாகியாக இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை தனது வீட்டுக்கு அருகே இருந்த கடையில் தேனீர் அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் பிரவீன் நெட்டாருவை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பினர்.
இதில் சம்பவ இடத்திலேயே பிரவீன் உயிரிழந்தார். பிரவீன் கொலை செய்யப்பட்டதை கண்டித்து தக்ஷின் கன்னடா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினரும், இந்து அமைப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த மாவட்டத்தில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.
5 தனிப்படைகள்
இதனிடையே, தலைமறைவாகியுள்ள கொலையாளிகளை கண்டுபிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மங்களூரு எஸ்பி. தெரிவித்துள்ளார். கொலையாளிகள் வந்த மோட்டார் சைக்கிளில் கேரளாவின் பதிவு எண் கொண்ட நம்பர் பிளேட் இருந்ததால் இரண்டு தனிப்படைகள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பழிக்கு பழியா
இந்நிலையில், தக்ஷின் கன்னடாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முஸ்லிம் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதற்கு பழிவாங்கும் விதமாக பிரவீண் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.