உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருசக்கர வாகனத்தில் பயணித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தலைக்கவசம் அணியாதது விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியின் குடும்பத்தினரை பிரியங்கா காந்தி சந்திக்கச் சென்றார். அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் கட்சி நிர்வாகி ஒருவரின் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றார்.
ஆனால் பிரியங்கா காந்தியும் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவரும் தலைக்கவசம் அணியவில்லை. ஏற்கனவே கடந்த 2014ஆம் ஆண்டு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியது விவாதங்களுக்கு உள்ளானது. தற்போது பிரியங்கா காந்தி இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்றது பெரும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.