இந்தியா

குடியரசுத் தலைவர் ஒப்புதல்.. சட்டமாகியது முத்தலாக் மசோதா..!

குடியரசுத் தலைவர் ஒப்புதல்.. சட்டமாகியது முத்தலாக் மசோதா..!

Rasus

முத்தலாக் தடை மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ரா‌ம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து முத்தலாக் மசோதா சட்டமாகி, நடைமுறைக்கு வந்துள்ளது.

முத்தலாக் தடை மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மக்களவையில் கடந்த 25-ஆம் தேதி நிறைவேறியது. மக்களவையில் மசோதாவுக்கு ஆதரவாக 302 வாக்குகளும், எதிராக 78 வாக்குகளும் விழுந்தன. இதன் தொடர்ச்சியாக, இம்மசோதா கடந்த 30-ஆம் தேதி மாநிலங்களவையில் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேறியது. அந்த அவையில் மசோதாவுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் கிடைத்தன.

முத்தலாக் தடை மசோதா இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அம்மசோதா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மசோதாவை சட்டமாக்க அவர் நேற்றிரவு கையெழுத்திட்டார். இதனையடுத்து அந்த மசோதா சட்டமானது. இதன் தொடர்ச்சியாக மத்திய சட்ட அமைச்சகம் அரசாணை வெளியிட்டது.

இதன் விளைவாக முத்தலாக் தடை சட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, தடையை மீறி முஸ்லிம் ஆண் ஒருவர் முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்தால், அவர் மூன்று ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும்.