இந்தியா

கும்பமேளாவுக்காக உலகின் மிகப்பெரிய தற்காலிக நகரம்

கும்பமேளாவுக்காக உலகின் மிகப்பெரிய தற்காலிக நகரம்

webteam

உலகின் மிகப்பெரிய தற்காலிக நகரம் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் கும்பமேளாவுக்காக அமைக்கப்பட்டுள்ளது. 

அலகாபாத், நாசிக், உஜ்ஜையினி, ஹரித்துவார் ஆகிய இடங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூரண கும்பமேளா நடைபெறுகிறது. அதுபோலவே ஹரித்துவார், அலகாபாத்தில் மட்டும் 6 ஆண்டுக்கு ஒருமுறை அரை கும்பமேளா விழாவும் நடைபெறுவது வழக்கம்.

அலகாபாத்தில் 2013 ஆம் ஆண்டு பூரண கும்பமேளா நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு அரை கும்பமேளா நடைபெறவுள்ளது. அதன்படி அலகாபாத்தில் ஜனவரி 15-ம் நாள் மகர சங்கராந்தி அன்று தொடங்கி மார்ச் மாதம் 4-ம் நாள் மகாசிவராத்திரி வரை 48 நாள்கள் வரை நடக்கும் இந்த அரை கும்பமேளா விழா நாட்களில் நீர்நிலைகளில் பக்தர்கள் நீராடுவார்கள். 


நாசிக், உஜ்ஜையினி, ஹரித்துவார் போன்ற இடங்களில் நடக்கும் கும்பமேளா விழாவைவிட அலகாபாத்தில் நடக்கும் விழா விசேஷமானது. அங்குதான் கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற மூன்று நதிகளும் கூடும் திரிவேணி சங்கமம் நடைபெறுகிறது. 

இந்த ‌‌கும்பமேளாவுக்காக அனைத்து ஏற்பாடுகளுக்காக சுமார் 2 ஆயிரத்து 900 கோடி ரூபாய் செலவிடப்படுகின்றன.  கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நிதிகள் ஒன்றாக சங்கமிக்கும் இடமான பிரயாக்ராஜில் கும்பமேளா நிகழ்ச்சி நடைபெறுகிறது. கும்பமேளா தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமடைந்துள்ளன. இதற்காக அங்கு சகலவசதிகள் கொண்ட தற்காலிக நகரமே உருவாக்கப்பட்டுள்ளது. அதிநவீன சொகுசு வசதிகள் கொண்ட நான்காயிரத்துக்கும் மேற்பட்ட குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்திரபிரஸ்தம் என்று பெயரிடப்பட்ட குடில் வளாகத்தில் கும்பமேளா தினத்தன்று சாதுக்கள் பூஜை செய்வதற்காக யாக குண்டங்கள் கட்டப்பட்டுள்ளன. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் இந்திரபிரஸ்தம் குறித்த தகவல்கள் தெரிந்துகொள்ள தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது.

மேலும் தாற்காலிக நகரத்துக்குச் செல்ல பிரயாக்ராஜ் எல்லையிலிருந்து 250 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகளும் 22 தாற்காலிக பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் பாதுகாப்புக்காக கமாண்டோ கட்டுப்பாட்டு மையம், மூன்று பெண்கள் காவல்நிலையம், 40 காவல் மையங்கள், 15 தீயணைப்பு நிலையங்கள் மற்றும் 40 கண்காணிப்பு கோபுரங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கும்பமேளா திருவிழாவில் கலந்துகொள்வதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான சாதுக்கள், அகோரிகள் தினமும் பாரம்பரிய முறையில் யானை, ஒட்டகம், குதிரை உள்ளிட்டவை மீது சவாரி செய்தவாரே பிர‌யாக்ராஜ் நோக்கி செல்கின்றனர். 10 லட்சம் வெளிநாட்டினர் உள்பட 12 கோடி பக்தர்கள் கும்பமேளாவில் பங்கேற்கின்றனர்.

குறிப்பு : உத்தர பிரதேச மாநில தலைநகர் அலகாபாத் பெயரை பிரயாக்ராஜ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.