இந்தியா

ஆந்திராவின் ''கிங் மேக்கர்'' பிரசாந்த் கிஷோர்

ஆந்திராவின் ''கிங் மேக்கர்'' பிரசாந்த் கிஷோர்

webteam

ஆந்திராவில் முதல்முறையாக ஆட்சி அமைக்க இருக்கும் 46 வயதுடைய ஜெகன் மோகன் ரெட்டியின் வெற்றிக்கு பின்னால் இருந்து திட்டம் வகுத்து கொடுத்த கிங் மேக்கர் பிரசாந்த் கிஷோர்.

ஆந்திராவில் படைபெற்ற மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களில் வலிமை வாய்ந்த தெலுங்கு தேசம் கட்சியை வீழ்த்‌தி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படும் ஒரு பெயர் பி.கே. எனப்படும் பிரசாந்த் கிஷோர். தேர்தல் வித்தகர் என அழைக்கப்படும் இவர் 2012 குஜராத் சட்டப்பேரவை தேர்தலின் போது வெளிச்சத்திற்கு வந்தவர். அந்த தேர்தலில் அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உடன் இணைந்து பாஜகவுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்தார். அதைத் தொடர்ந்து 2014 மக்களவை தேர்தலிலும் பாஜகவுக்கு தேர்தல் வியூகங்களை அமைத்துக் கொடுத்து மாபெரும் வெற்றி பெற உறுதுணையாக இருந்தவரும் பி.கே தான்.

2015 ஆம் ஆண்டு பீகார் பேரவை தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் மெகா கூட்டணி பெற்ற வெற்றியிலும் பிரசாந்த் கிஷோர் பின்புலத்தில் இருந்தார். பஞ்சாப்பில் 2017ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வகுத்துக் கொடுத்த யுக்திகளின் உதவியுடன் தான் காங்கிரஸ் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. ஆந்திர சட்டப்பேரவை தேர்தலுக்காக 2 ஆண்டுகளுக்கு முன்பே பிரசாந்த் கிஷோரை, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆலோசகராக அக்கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி நியமித்தார்.

அதைத் தொடர்ந்து பிரசாந்த் கிஷோரின் இந்திய அரசியல் செயல் குழுவின் 400 ஊழியர்கள் ஆந்திராவில் முகாமிட்டு வார்டு அளவில் தேர்தல் ஆய்வு கள பணிகளை மேற்கொண்டனர். அந்த ஆய்வுகளின் அடிப்படையில் பிரசாந்த் கிஷோர் வகுத்து கொடுத்த பரப்புரை வியூகத்தை ஜெகன் மோகன் ரெட்டி பின்பற்றினார். அதன்படியே பிரஜா சங்கல்ப யாத்ரா என்ற பேரணியை நடத்தி 15 மாதங்களில் 3 ஆயிரம் கிலோ மீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டு இரண்டரை கோடி மக்களை ஜெகன் சந்தித்தார்.

பிரசாந்த் கிஷோர் வகுத்து கொடுத்த வியூகங்கள் ஜெகன் மோகன் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 தொகுதிகளை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வென்றுள்ளது. இதன் மூலம் ஆந்திர பிரதேசத்தின் முதலமைச்சராக முதல் முறையாக பதவியேற்க உள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி. பட்டிதொட்டி எங்கும் பயணித்து பெற்ற வெற்றியை ஜெகன் கையாளப் போகும் விதம், இந்திய அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.