முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள அவரது மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி, இதனை பயன்படுத்தி பாரதிய ஜனதா பொய்யான செய்திகளை பரப்பும் என சாடியுள்ளார்.
நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் குடியரசுத் தலைவருமான பிரணாப் முகர்ஜி உரையாற்றுகிறார். இந் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் பிரணாப் முகர்ஜியிடன் கூறினர். ஆனாலும் அதைக் கேட்காமல் கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்நிலையில், நாக்பூர் சென்றடைந்த பிரணாப் முகர்ஜியை, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய பிரமுகர்கள் தொண்டர்கள் வரவேற்றனர்.
இந் நிலையில் அவரது மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி, பாஜகவில் இணைந்ததாக வதந்தி பரவியது. இதனால் கோபமடைந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஷர்மிஸ்தா, பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை வைத்து பாஜக இப்படி பொய்யான செய்திகளை பரப்பும் என விமர்சித்துள்ளார். நிகழ்ச்சியில் பிரணாப் என்ன பேசினார் என்பது மறக்கப்பட்டு, அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை மட்டுமே வைத்து பொய்யான செய்திகளையும் தகவல்களையும் பாஜக பரப்பும். அதற்கான வாய்ப்பை நீங்கள் அளிக்கிறீர்கள் என்றும் பிரணாப்பிற்கு தன் அதிருப்தியை தெரிவித்துள்ளார்.