குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது பிரிவு உபச்சார விழாவில், பிரதமர் மோடியுடன் கிடைத்த நட்பு என்றும் மறக்க முடியாததாக இருக்கும் என்றும், மோடியின் திட்டங்கள், செயல்பாடு மாற்றங்களை உருவாக்குவதாக அமைந்துள்ளது என்றும் மோடியை புகழ்ந்துள்ளார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு விடை கொடுக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தேவேகவுடா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய பிரணாப், நாட்டு மக்களுக்கு நேர்மையான பணியாளனாக சேவையாற்றிய மன நிறைவுடனும், வானவில் போன்ற பல்வேறு நினைவுகளுடனும் விடைபெறுவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று அவருக்கு விடைகொடுத்தனர்.
பிரிவு உபச்சார விழாவில் தமக்கு பாராட்டு உரை வழங்கியதற்கு பிரணாப் முகர்ஜி நன்றி தெரிவித்தார். நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்டவன் நான் என்று பிரணாப் முகர்ஜி பேசினார். சமூக பொருளாதார வளர்ச்சிக்கான ஆவணம்தான் இந்திய அரசியல் சட்டம் என பிரணாப் கூறியுள்ளார். 48 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். மேலும் நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளரும் நமக்கு முக்கியத்துவம் பெற்றவர்தான். விவாதங்கள் குறைந்து வருவது கவலை அளிக்கிறது. பிரதமர் மோடியுடன் கிடைத்த நட்பு என்றும் மறக்க முடியாததாக இருக்கும். மோடியின் திட்டங்கள், செயல்பாடு மாற்றங்களை உருவாக்குவதாக அமைகிறது. ஜிஎஸ்டி கூட்டாட்சியின் அடையாளமாக திகழ்கிறது. ஜிஎஸ்டி நமது வளர்ச்சிக்கு துணையாக இருக்கும். இந்த நாடாளுமன்றத்தை விட்டு செல்வது எனக்கு கவலை அளிக்கிறது. இருப்பினும் மன நிறைவு பணி மகிழ்வை தரும். அனைவருக்கும் நன்றி என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.