டெல்லியில் பெய்த மழை காரணமாக காற்று மாசு குறைந்துள்ளதாக காற்று தரம் மற்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல், மாசுவை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கத் தடை கோரி தொடரப்பட்ட வழக்கில், தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனையடுத்து தீபாவளிக்கு முந்தைய நாள் மற்றும் தீபாவளி நாளில் சென்னை நகரில் காற்றின் மாசு அளவு குறைவாக இருந்தது.
அதேசமயம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தீபாவளியன்று டெல்லியில் காற்றின் மாசு அளவு மிகவும் அதிகமாக பதிவாகியது. காற்றின் மாசு அளவு 999 என்ற குறியீட்டை எட்டி மிகவும் அபாயகரமாக இருந்தது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு டெல்லியில் காற்று மாசு மிக மோசமான நிலைக்குச் சென்றது. பட்டாசு வெடிக்க கட்டுப்பாடும், கனரக மற்றம் மத்திய ரக வாகனங்கள் டெல்லி நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. இச்சுழலில் நேற்று இரவு டெல்லியில் பெய்த மழை காரணமாக டெல்லியில் காற்று மாசு குறைந்துள்ளது. நேற்றைய தினத்தில், 419 ஆக இருந்த காற்று தர குறியீடு, இன்று கணிசமாக குறைந்து 342 என பதிவாகியுள்ளது என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.