இந்தியா

பிரதமர் மோடிக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்கு இணையதளத்தில் மாயம்..?

பிரதமர் மோடிக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்கு இணையதளத்தில் மாயம்..?

Rasus

பிரதமர் மோடிக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்கு மட்டும் தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்து மாயமாகியுள்ளது.

மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மூன்று கட்ட தேர்தல் நடைபெற்றுள்ளது. தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகளும் அமலில் உள்ளன. இதனிடையே மகாராஷ்டிரா மாநிலம் லத்தூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட பிரதமர் மோடி, புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கும், பாலகோட்டில் தாக்குதல் நடத்திய வீரர்களுக்கும் உங்களது வாக்குகளை அர்ப்பணியுங்கள் என தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து பிரதமர் மோடி தேர்தல் விதிகளை மீறி பேசியுள்ளதாக கொல்கத்தாவை சேர்ந்த  மகேந்திர சிங் என்பவர் வழக்கு பதிவு செய்தார். ஆனால் இந்த வழக்கு தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்து மாயமாகியுள்ளது.

பரப்புரையில் தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை 426 வழக்குகள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் உள்ளன. ஆனால் மோடிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட தேர்தல் விதிமீறல் வழக்கு மட்டும் தேர்தல் ஆணைய இணையதளத்தில் இல்லை. இதனையடுத்து வழக்கு என்னவானது என மகேந்திர சிங் அறிந்துகொள்ள முயற்சித்தபோது, தேர்தல் ஆணைய இணையதளத்தில் அந்த வழக்கு தீர்க்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் ஆணைய அதிகாரிகளோ, இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாவும், தேர்தல் ஆணைய இணையதளத்தில் தொழில்நுட்ப பிரச்னையால் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் வழக்கு தொடர்ந்து இரண்டு வாரங்களாகியும் தேர்தல் ஆணையம் இதுவரை பிரதமர் மோடி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே புல்வாமா தாக்குதல் பற்றி பிரதமர் மோடி வேறு ஒரு இடத்திலும் பரப்புரை மேற்கொண்டுள்ளார். அதேசமயம் தேர்தல் ஆணைய வட்டாரங்கள், இந்த விவரகாரத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறுகின்றன.