புதுச்சேரியில் திருமணமான ஒரே மாதத்தில் கணவர் வீட்டில் புதுப்பெண் மர்மமான முறையில் மரணம் அடைந்தநிலையில். வரதட்சணை கேட்டு தங்களது மாப்பிள்ளை, மகளை அடித்துக் கொலை செய்துவிட்டதாக பெண்ணின் உறவினர்கள் புகார் கூறியுள்ளனர். அவர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி புதுசாரம் லட்சுமி நகரை சேர்ந்த கேஸ் வினியோகஸ்தர் ஏழுமலை என்பவருக்கும், விழுப்புரம் மாவட்டம் தனசிங்கு பாளையத்தை சேர்ந்த சிவபாக்கியம் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து சிவபாக்கியம் தனது கணவர் ஏழுமலையுடன் புதுச்சேரியில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அடிக்கடி கணவர் ஏழுமலை நகைகள் கேட்டும், வீட்டு சொத்து பத்திரம் கேட்டும் மனைவியை துன்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த பெண் வீட்டார், மகளுக்கு தாலி பிரித்து போடும்போது நகை மற்றும் சொத்துபத்திரம் தருவதாக கூறியுள்ளனர். ஆனால் தொடர்ந்து ஏழுமலை தினந்தோறும் மது அருந்துவிட்டு வந்து தனது மனைவி சிவபாக்கியத்தை தாக்கியதாக தெரிகிறது.
இதையடுத்து நேற்றும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், இரவு சிவபாக்கியம் இறந்துவிட்டதாக அவரது வீட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக பதறியடுத்துக் கொண்டு புதுச்சேரி வந்த சிவபாக்கியத்தின் குடும்பத்தினர் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் திருமணமாகி ஒரு மாதமே ஆகியுள்ளதாகவும், திருமணம் ஆன நாள் முதல் வரதட்சணை கேட்டு தனது மகளை துன்புறுத்தி வந்த அவர், உச்சகட்டமாக கொலை செய்து உள்ளதாகவும், எனவே அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்து தங்கள் மகள் சாவுக்கு நியாயம் கேட்டு கோரிமேடு தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
மேலும், காவல் நிலையத்தை 20-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆசை ஆசையாக வளரத்த மகளை வரதட்சணை கேட்டு கொலை செய்தவர்களை கைது செய்ய கோரியும், மகளை நினைத்து தாய் மற்றும், குடும்பத்தினர் காவல்நிலையம் முன்பு தரையில் அமர்ந்து கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி ஒரு மாதமே ஆவதால் தாசில்தார் விசாரணையும் நடைபெற்று வருகிறது.