இந்தியா

பஞ்சாப் வங்கி மோசடி: சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு

பஞ்சாப் வங்கி மோசடி: சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு

rajakannan

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி விவகாரத்தில், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை பிராடி ரோடு கிளை மூலம் நடந்த ரூ.11,500 கோடி மோசடி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி இந்த மோசடியில் ஈடுபட்டார். நிரவ் மோடி தனது குடும்பத்துடன் வெளிநாடு தப்பி விட்டார். இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதேபோல அமலாக்கத்துறை அதிகாரிகளும் நாடு முழுவதும் உள்ள நிரவ் மோடி நிறுவனங்களிலும் சோதனை நடத்தினர். இதனிடையே, இந்த விவகாரத்தில் மறைந்த தொழிலபதிர் திருபாய் அம்பானியின் மருமகன் விபுல் அம்பானி உள்ளிட்ட 5 பேரை சிபிஐ போலீசார் நேற்று கைது செய்தனர்.

இந்நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தக் கோரிய பொதுநல மனு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் கன்வில்கர் மற்றும் சந்த்ருசத் தலைமையிலான அமர்வு முன்பு இந்த விசாரணை நடைபெற்றது.

அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வேறு விசாரணை தேவையில்லை என்று அவர் கூறினார். வழக்கு விசாரணை மார்ச் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.