இந்தியா

2025ம் ஆண்டிற்குள்ளாகவே பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு... வேகம் காட்டும் மத்திய அரசு

2025ம் ஆண்டிற்குள்ளாகவே பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு... வேகம் காட்டும் மத்திய அரசு

நிவேதா ஜெகராஜா

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி விவசாயிகள் சிலருடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது பேசிய பிரதமர் 2025 ஆம் ஆண்டிற்குள்ளாகவே பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு சாத்தியம் என்று கூறினார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு சாமானியர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான பிரச்னையாக இருந்து வருகிறது. அதனால், பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக பல்வேறு யோசனைகள் முன் வைக்கப்பட்டு அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின்சார கார்களின் உற்பத்தி உள்ளிட்டவற்றை அதில் சொல்லலாம். அந்த வகையில்தான் பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டத்தையும் மத்திய அரசு கையில் எடுத்து செயல்படுத்தி வருகிறது.

அது என்ன பெட்ரோல் - எத்தனால் கலப்பு? 

எத்தனால் என்பது, கரும்பு சக்கை – சேதமடைந்த உணவு மற்றும் தானியங்களான கோதுமை, உடைந்த அரிசி, விவசாய கழிவுகள் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் ஆல்கஹால் வகை. உலகளவில், கரும்பு தயாரிப்பில் இரண்டாவது பெரிய நாடு, இந்தியாதான் என்பதால், இந்த ‘பெட்ரோலில் எத்தனால்’ முறையால், பல விவசாயிகள் பயன்பெற முடியும் என கூறப்படுகிறது. பெட்ரோலில் எத்தனால், சுற்றுச்சூழல் மாசுபாடு குறையுமென்றும், அதனால் கச்சா எண்ணெய் இறக்குமதியும் குறையுமென்றும் மத்திய அரசு கூறி வருகிறது. 

அதனால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 2014 ஆம் முதன் முதலில் ஆட்சி அமைத்தது முதல் பெட்ரோலில் எத்தனால் கலப்பு திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு, இந்த கணக்கு, 1 – 1.5 % என்றிருந்தது. அது தற்போது, 8.5 % என உயர்ந்துள்ளது. 022 ம் ஆண்டுக்குள் 10 சதவிகிதமும், 2030 ம் ஆண்டுக்குள் 20 சதவிகிதமும் பெட்ரோலில் எத்தனால் கலப்பை சாத்தியப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில்தான், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி விவசாயிகள் சிலருடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார். தொடர்ந்து, 2020 – 25 ம் ஆண்டுக்கான பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்ட வரைவரிக்கையை சமர்ப்பித்திருத்தார். புனேவில் மூன்று இடங்களில் ஈ100 மையங்களுக்கான சோதனை திட்டத்தையும் பிரதமர் துவக்கி வைத்தார்.

பின்னர் பேசிய பிரதமர் மோடி, “பெட்ரோலில் 20 சதவிகித எத்தனால் கலப்பதென்பது, 2030 ம் ஆண்டு நாம் திட்டமிட்டிருந்த வளர்ச்சி. அது தற்போது 2025 ம் ஆண்டிலேயே எட்டலாம். நாட்டின் மரபு சாரா எரிசக்தி உற்பத்தித் திறன் 250 % அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இப்பிரிவில், உலகின் 5 பெரிய நாடுகளில் ஒன்றாகியுள்ளது இந்தியா” எனக் கூறினார்.

இது தொடர்பாக இந்த வாரத்தில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் முக்கியமான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருந்தது. அதில் 2023 ஏப்ரல் 1-ல் இருந்து பெட்ரோலில் 20 சதவீதம் வரை எத்தனாலை கலந்து விற்குமாறு எண்ணெய் நிறுவனங்களை அறிவுறுத்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டிற்குள் அனைத்து பெட்ரோலும் 20 சதவிதம் எத்தனால் கலப்புடன் விற்பனை செய்யப்படும் என்பதை அரசின் இலக்கு எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இருப்பினும் ­பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படுவதால், வாகனங்களை கழுவும்போது, கவனம் தேவை என்று பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அவர்கள், ‘எத்தனால் கலந்த பெட்ரோலில் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்தாலும், அது எத்தனாலுடன் கலந்துவிடும். வெறும் பெட்ரோலில் அப்படியில்லை…. தண்ணீர் தனியாக தெரியும். ஒருவேளை இந்த எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனைக்கு வந்தால், அது வாகங்கனங்களில் அதிக பிரச்னைகளை அடிக்கடி ஏற்படுத்தும்’ என்று கூறியுள்ளனர்.