தூய்மை இந்தியா திட்டத்தை நடைமுறைப்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் விருது வழங்கப்படுகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்து 2014ஆம் ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. வீடுகளில் கழிவறைகள் கட்டுவது, பொதுக்கழிப்பறைகள் அமைப்பது, திடக் கழிவு மேலாண்மை உருவாக்குவது உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை பாராட்டும் வகையில் அமெரிக்காவின் பில் மற்றும் மெலிந்தா கேட்ஸ் நிறுவனம் விருது ஒன்றை வழங்குகிறது. இந்த மாத இறுதியில் பிரதமர் மோடி அமெரிக்கா செல்லும் போது, இந்த விருது வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மத்திய வடகிழக்கு பிரதேசங்கள் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், தனது விடாமுயற்சி மற்றும் புதுமையால் பிரதமர் மோடி மேலும் ஒரு விருதைப் பெற்று, உலக தரத்திற்கு நம்மை கொண்டு சென்று ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ளும் வகையில் செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.