இந்தியா

“காஷ்மீர் போராட்டம்;‌ காஷ்மீரிகளுக்கு எதிரானது அல்ல” - மோடி விளக்கம்

“காஷ்மீர் போராட்டம்;‌ காஷ்மீரிகளுக்கு எதிரானது அல்ல” - மோடி விளக்கம்

webteam

காஷ்மீருக்காகத்தான் இந்தியா போராடி வருவதாகவும் அது காஷ்மீர் மக்களுக்கு எதிரானது இல்லை என்றும் பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அந்தத் தாக்குதலுக்கு  சம்பவம் நாட்டைஅதிர்ச்சிக்குள்ளாக்கியது. காஷ்மீர் தாக்குதலால் தன் நெஞ்சில் தீ எரிந்து கொண்டிருப்பதாகவும், இந்தத் தாக்குதலுக்காக எதிரிகள் நிச்சயம் பெரிய விலை கொடுக்க வேண்டுமென்றும் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். மேலும் காஷ்மீர் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, காஷ்மீர் மாணவர்கள் தாக்கப்படும் சம்பவம் இனிமேலும் இந்நாட்டில் நடக்கக் கூடாது எனக் கூறினார். பயங்கரவாதத்தால் காஷ்மீர் மக்களும், அந்த மாநில இளைஞர்களும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். காஷ்மீரில் பிரிவினையை தூண்டுபவர்கள் மீது கடு‌ம் நடவடிக்கை எடுக்க நமது ராணுவத்தினருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். 

புல்வாமா தாக்குதலில் இறந்தவர்களுக்கு ஆதரவாக இந்தியா மட்டுமல்ல, உலகமே அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்று பிரதமர் தெரிவித்தார். மேலும் சில மாநிலங்களில் காஷ்மீர் மாணவர்கள் தாக்கப்பட்ட நிலையில் பிரதமர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனைதொடர்ந்து காஷ்மீர் மக்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், காஷ்மீர் மக்களின் இதயத்தில் உள்ள உணர்வுகளை பிரதமர் பிரதிபலித்ததற்காக நன்றி என்று கூறியுள்ளார். புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஒரு வாரமாக பொதுமக்களின் கோபத்துக்கு காஷ்மீரிக்கள் ஆளானதாக உமர் கூறியுள்ளார். காஷ்மீரிக்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக பிரதமர் பேசியுள்ளதால், இனி அந்த நிலை மாறும் என்று நம்புவதாகவும் உமர் தெரிவித்துள்ளார்.