இந்தியா

இந்திய அளவில் மோடிக்கு செல்வாக்கு குறைந்த மாநிலம் தமிழ்நாடு - கருத்துக்கணிப்பு

இந்திய அளவில் மோடிக்கு செல்வாக்கு குறைந்த மாநிலம் தமிழ்நாடு - கருத்துக்கணிப்பு

webteam

இந்திய வட மாநிலங்களில் அதிகளவு செல்வாக்குப் பெற்றிருக்கும் பிரதமர் மோடிக்கு தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் செல்வாக்கு மிகவும் குறைவாக இருப்பதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

சி ஓட்டர் என்ற தேர்தல் கருத்துக் கணிப்பு நிறுவனம் பிரதமர் மோடியின் செல்வாக்கு குறித்து, இந்தியாவின் அனைத்து தொகுதிகளிலிருந்தும் 60 ஆயிரம் வாக்காளர்களிடம் தகவல்களை சேகரித்தது. அதில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 74 சதவிகித மக்கள் மோடியின் ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றனர்.

ஆனால், தமிழகத்தில் வெறும் 2.2 சதவிகித மக்கள் மட்டுமே பிரதமராக மோடியின் செயல்பாடுகள் நல்ல முறையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது தான் இந்தியாவிலேயே மிகக் குறைவான சதவிகிதமாகும். இதன் மூலம், மோடியின் ஆட்சி, தென்னிந்திய மக்களுக்கு திருப்தி ஏற்படுத்தவில்லை என்பது தெரியவருகிறது.

மோடியின் மதம் சார்ந்த அரசியல் நகர்வுகள், தமிழக திராவிட கொள்கைகளுக்கு எதிரானதாக இருப்பதால் மக்களுக்கு அவர் மீது பெரிய ஈடுபாடு இல்லை என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. மேலும் தமிழக மக்களின் முக்கிய பிரச்னைகளாக பார்க்கப்படும் காவேரி நதிநீர் பங்கீடு, ஜல்லிக்கட்டுப் போட்டி போன்றவற்றில் மோடியின் பார்வை, தமிழக மக்களின் எண்ணங்களுக்கு எதிரானதாகவே இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் தான் மோடி தமிழகம் வரும் போதெல்லாம், GO BACK MODI என்ற ஹேஷ்டேக்கு சமூக வலைத்தளங்களில் பிரபலமாக காரணமாகிறது. இது வெறும் பதிவாக மட்டும் இல்லாமல், மோடியின் மீதான தமிழக மக்களின் அதிருப்தியைக் காட்டுவதாகவே இருப்பதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.