இந்தியா

"பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முந்தைய அரசுகளே காரணம்" - பிரதமர் மோடி

"பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முந்தைய அரசுகளே காரணம்" - பிரதமர் மோடி

webteam

முன்னர் இருந்த அரசுகள் எரிபொருள் தேவைக்கு வெளிநாடுகளை சார்ந்திருப்பதை குறைக்க நடவடிக்கை எடுக்காததுதான், சாமானிய மக்கள் இன்று மிகவும் சிரமப்படுவதற்கு காரணம் என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் பிரதமரின் இந்தப் பேச்சு அமைந்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு எண்ணெய் எரிவாயுத் திட்டங்களுக்கு புதன்கிழமை காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, நிறைவேறிய திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தும் வைத்தார்.

அப்போது பேசிய அவர், "முன்னர் இருந்த அரசுகள் எரிபொருள் தேவைக்கு வெளிநாடுகளை சார்ந்திருப்பதை குறைக்க நடவடிக்கை எடுக்காததுதான், சாமானிய மக்கள் இன்று மிகவும் சிரமப்படுவதற்கு காரணம்.

இந்தியா தனது எரிசக்தி தேவைக்கு வெளிநாடுகளை சார்ந்திருப்பதை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியா தற்போது தனது ஒட்டுமொத்த எரிசக்தி தேவையில் 85 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்து மட்டுமே பெற்று வருகிறது. இதை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் உற்பத்தியை இந்தியா அதிகரித்து வருகிறது. 2030ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த எரிசக்தி பயன்பாட்டில் 40 விழுக்காடு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாக இருக்கும்" என்றார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, தர்மேந்திர பிரதான், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ராமநாதபுரம்-தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் இணைப்பு, சென்னை மணலியில் சிபிசிஎல் நிறுவனத்தில் பெட்ரோலிய எரிபொருளில் கந்தகத்தை நீக்குதல் ஆகிய நிறைவுற்ற திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். நாகப்பட்டினத்தில் அமையவுள்ள காவிரிப்படுகை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்க திட்டத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.