இந்தியா

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் கூட்டாட்சியை வலுவாக்கும் முனைப்பில் பினராயி விஜயன், மம்தா!

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் கூட்டாட்சியை வலுவாக்கும் முனைப்பில் பினராயி விஜயன், மம்தா!

நிவேதா ஜெகராஜா

கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்த கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இருவரும் அனைத்து மாநில முதல்வர்களை வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.

இந்தியாவின் கொரொனா தடுப்பூசி இயக்கம் மூலமாக, கடந்த மே 1-ஆம் தேதி முதல் 18 - 44 வயதினர் அனைவருக்கும் தடுப்பூசி திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசின் இரட்டை கொள்முதல் தடுப்பூசிக் கொள்கை காரணமாக, மாநிலங்களிடம் போதிய தடுப்பூசி கையிருப்பு இல்லாத நிலை நிலவி வருகிறது. இதன்காரணமாக கொரோனாவுக்கு எதிரான பேராயுதமான தடுப்பூசிக்கு தற்போது பல்வேறு மாநிலங்களில் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மக்களின் உயிர்களை காக்க அந்தந்த மாநில அரசுகளே உலகளாவிய டெண்டர் விடுத்து தடுப்பூசியை கொள்முதல் செய்ய முயற்சி மேற்கொண்டன. ஆனால், தடுப்பூசி நிறுவனங்களோ மத்திய அரசிடம் மட்டுமே நேரடியாக தடுப்பூசியை வழங்க முடியும் என தெரிவித்திருக்கின்றன.

இந்நிலையில், போதிய தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து, அவற்றை மாநிலங்களுக்கு இலவசமாக விநியோகிக்கும்படி மாநில முதல்வர்கள் வலியுறுத்த வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப், மகாராஷ்டிரா உள்ளிட்ட பாஜக அல்லாத 11 மாநில முதல்வர்களுக்கு அவர் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில், "கொரோனா 2ஆம் அலை நிலவி வரும் இந்த நேரத்தில், மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கும் கடமையிலிருந்து மத்திய அரசு விலகிக்கொள்ள முயல்வது மிகவும் துரதிர்ஷ்டவசமான செயல். தற்போதைய நிலையில் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்யும் சுமை முழுவதுமாக மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மாநில அரசுகள் சொல்ல முடியாத அளவு நிதி நெருக்கடியில் உள்ளது. மக்கள்தொகையில் கணிசமான பகுதியினருக்கு தடுப்பூசி போட்டால் மட்டுமே ஹெர்டு இம்யூனிட்டி (Heard Immunity) எனப்படும் சமூக தடுப்பாற்றல் ஏற்படும். ஆனால் தற்போது 3-4 சதவீத மக்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களும் போடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசிகளை நாங்களே பெற்றுக்கொள்ளலாம் என நினைத்தால் வெளிநாட்டு மருந்து நிறுவனங்கள் மாநில அரசுகளுடன் நேரடியாக ஒப்பந்தங்களை மேற்கொள்ள மறுக்கின்றன. எனவே போதிய தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து அவற்றை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்க வலியுறுத்த வேண்டும். தடுப்பூசி விவகாரத்தில் அனைத்து மாநிலங்களும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்" என்று பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதே விவகாரத்திலும், தலைமை செயலாளர் விவகாரத்திலும் மேற்கு வங்க முதல்வர் மம்தா, அனைத்து மாநில அரசுகளுக்கும் இதேபோல் ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய மம்தா பானர்ஜி, "கொரோனா தடுப்பு பணிகளில் தீவிர பங்கெடுத்து வரும் தலைமைச் செயலாளர் அலப்பன் பந்த்யோபாத்யாய போன்ற அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்கு அழைத்துக் கொள்கிறார்கள். இப்படி செய்வதன் மூலம் பிரதமர் மோடியும், அவரின் தலைமையிலான மத்திய அரசும் எந்த மாதிரியான செய்தியை நாட்டுக்குச் சொல்ல வருகிறது என்பது தெரியவில்லை.

பாஜக மற்றும் அதன்கூட்டணி அல்லாத எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் அனைத்து மாநில அரசுகள் மற்றும் முதல்வர்கள், அனைத்து அதிகாரிகள் மத்திய அரசுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். நாம் அனைவரும் இந்தப் போரை ஒன்றாக சந்திப்போம். ஐஏஎஸ் அதிகாரி அலப்பன் பந்த்யோபாத்யாயவுக்காக மட்டும் நான் பேசவில்லை. நாட்டிலுள்ள அனைத்து அதிகாரிகளுக்காகவும் நாம் ஒன்றிணைய வேண்டியது அவசியம்" என்று அழைப்புக் குரல் விடுத்துள்ளார்.

இவர்கள் இப்படி கூற, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், "மற்ற மாநிலங்களைப் போலவே ஜார்க்கண்ட் மாநிலமும் பல்ஸ் போலியோ உள்ளிட்ட அனைத்து நோய்த்தடுப்பு திட்டங்களுக்கும் மத்திய அரசிடமிருந்தே இலவசமாக தடுப்பூசிகளைப் பெற்றுள்ளது. ஆனால் கொரோனா தடுப்பூசிகளை மாநிலங்களே சொந்தமாக வாங்கவேண்டும் என கட்டாயாப்படுத்தப்படுவது சுதந்திர இந்திய வரலாற்றில் இதுவே முதல் தடவை.

முழு தேசமும் ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா நெருக்கடியில் போராடி வரும் சவாலான சூழ்நிலையில், மத்திய அரசு கூட்டாட்சி கொள்கைக்கு எதிராக நிற்கிறது. தடுப்பூசி முன்னுரிமைகளை வரையறுப்பதற்கான சுதந்திரத்தை மாநிலங்களுக்கே மத்திய அரசு வழங்கவேண்டும். இதுவே முழுமையான தடுப்பூசி இலக்கை சரியான நேரத்தில் அடைய உதவும். இதுவே மூன்றாவது அலையை திறம்பட சமாளிப்பதற்கான வழி. இதுபோன்ற கடினமான காலங்களில் உங்கள் ஆதரவு தேவை" என்று தெரிவித்திருக்கிறார்.