சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.90ஐ நெருங்கிவிட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் என்பதும் இன்றைய தேதிக்கு அத்தியாவசியமானதாக இருக்கிறது. தனிமனித பயன்பாடுகள், வணிகம் சார்ந்த போக்குவரத்து என அனைத்து தரப்பும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பெட்ரோல், டீசலை சார்ந்திருக்கிறது. எரிபொருளின் விலையேற்றம் என்பது ஒவ்வொரு சாமானியர்களையும் பாதிக்கும். எரிபொருளின் விலையேற்றம் நேரடியாகத்தான் பாதிக்க வேண்டும் என்பதல்ல. வாகனம் இல்லாத ஒருவரையும் எரிபொருள் விலையேற்றம் பாதிக்கும். விலையேற்றத்தால் வாகனங்கள் வாடகையைக் கூட்டும். அதனால் காய்கறிகள் விலையேறும். இப்படித்தான் எரிபொருளின் விலையேற்றம் மறைமுகமாக அனைவரையும் பாதிக்கிறது.
பெட்ரோல் டீசல் விலை நிர்ணயத்தை தினசரி நிர்ணயம் என்ற நடைமுறைக்கு கொண்டு வந்தது அரசு. அதன் பின்னர் ஏறுமுகமாகவே உள்ளது எரிபொருளின் விலை. கடந்த 27ம் தேதிக்கு பிறகு விலை மாற்றம் இல்லாமல் இருந்தது. பின்னர் பிப்ரவரி 4,5ம் தேதிகளின் விலை ஏற்றம் இருந்தது. அதன்பின்னர் 6 மற்றும் 7,8ம் தேதிகளில் விலை மாற்றம் இல்லை. இந்நிலையில் நேற்று விலை ஏற்றம் கண்டது பெட்ரோல், டீசல் விலை. இந்நிலையில் இன்றும் விலை ஏறுமுகத்தில் உள்ளது. பெட்ரோல் விலை 26 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ. 89.96ஆகவும், டீசல் விலை 24 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 82.90ஆகவும் விற்பனையாகிறது. கிட்டத்தட்ட ரூ.90ஐ நெருங்கிவிட்ட பெட்ரோல் விலையால் சாமானியர்கள் செய்வதறியாது உள்ளனர்.
இதற்கிடையே பட்ஜெட்டின் போது 'அக்ரி செஸ்' அறிமுகம் செய்யப்பட்டது. செஸ் என்பது கூடுதல் வரியாகும். இதில், பெட்ரோல் மற்றும் டீசல் மீது கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. அதாவது, பெட்ரோலுக்கு லிட்டருக்கு 2.50 ரூபாயும், டீசல் மீது லிட்டருக்கு 4 ரூபாயும் வரி உயர்த்தப்பட்டது. இதனால் நுகர்வோருக்கான பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருக்குமென பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் இந்த கூடுதல் வரியால் நுகர்வோர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்திருந்தார். ஆனால் சீரான வேகத்தில் பெட்ரோல், டீசல் விலையேறுவது பல்வேறு தரப்பினரையும் கலக்கமடைய வைத்துள்ளது.
பட்ஜெட் தினமான பிப்ரவரி 1ம் தேதி சென்னையில் பெட்ரோலின் விலை ரூ.88.82 ஆக இருந்தது. இன்று பெட்ரோலின் விலை 89.96 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களில் பெட்ரோலின் விலை 1 ரூபாய் 14 பைசா விலையேற்றம் கண்டுள்ளது. அதேபோல் டீசலின் விலையும் கடந்த 10 நாட்களில் 1 ரூபாய் 19 பைசா அதிகரித்துள்ளது.
கடந்த 10 நாட்கள் விலை நிலவரம்: