rn ravi pt web
இந்தியா

ஆளுநரிடம் நீட் தொடர்பாக கேள்வி எழுப்பிய மத்திய அரசு ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் பாஜக!

ஆளுநரிடம் நீட் தேர்வு தொடர்பாக கேள்வி எழுப்பியவர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சேலம் பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Angeshwar G

எண்ணித்துணிக எனும் தலைப்பின் கீழ் பல்வேறு தேர்வுகளை எழுதும் மாணவர்களை சந்தித்து வரும் ஆளுநர் கடந்த சில தினங்கள் முன் அதிக மதிப்பெண் பெற்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

அப்போது சேலத்தை சேர்ந்த மாணவர் ஒருவது தந்தையான அம்மாசியப்பன் என்பவர் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம், “எங்கள் பிள்ளைகள் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண்களையும் பெற்றுள்ளனர். இருந்தாலும் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என தொடர்ந்து கேட்டு வருகிறோம். அந்த விலக்கை எப்போது கொடுப்பீர்கள்?” என கேட்டார்.

அதற்கு பதில் அளித்த ஆளுநர், “நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திடமாட்டேன். பொதுப்பட்டியலில் இருப்பதினால் மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. நீட் தேர்வை பொறுத்தவரை கோச்சிங் சென்று தான் அதில் வெற்றி பெற வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. நன்றாக படித்தால் பள்ளிக்கல்வி வைத்தே நீட் தேர்வில் வெற்றி பெறலாம். ஒவ்வொரு முறையும் 'நீட் தேர்வில் இருந்து விலக்கு கொடுக்க வேண்டும்' என கேட்பது மாணவர்களின் திறனை கேள்விக்குள்ளாக்கும்.

Governor RN Ravi

நீட் தேர்வுக்கு முன் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுவது என்பது ஒவ்வொரு வருடமும் குறைவாகத்தான் இருக்கும். நீட் தேர்வுக்கு பிறகு தான் ஒவ்வொரு ஆண்டும் அதிகமான இடங்களை மாணவர்கள் பெற்றுள்ளனர்” என்றார்.

மாணவரின் தந்தை கேள்விக்கு ஆளுநர் அளித்த பதில் கடும் விமர்சனங்களை சந்தித்தது. இச்சமயத்தில் குரோம்பேட்டையை சேர்ந்த நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து அவரது தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆளுநர் சொன்ன பதிலை எதிர்த்து திமுகவினர் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் அறிவித்தனர். முன்னதாக பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டது.

ஆளுநர் மாளிகையில் நீட் தேர்வு தொடர்பாக கேள்வி எழுப்பிய அம்மாசியப்பன் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இந்நிலையில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அவர் வேலை செய்யும் இரும்பாலை அலுவலகத்தில் அதன் செயல் இயக்குநரிடம் மனு அளித்துள்ளனர்.

அம்மாசியப்பன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி சேலம் கிழக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் இரும்பாலை செயல் இயக்குநர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அந்த மனுவில், அம்மாசியப்பன் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றி கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தது, அரசுக்கு எதிராக ஊடகங்களுக்கு பேட்டி அளித்தது மற்றும் தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தது போன்ற காரணங்களை சுட்டிக் காட்டி அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த அம்மாசியப்பன், சேலத்தைச் சேர்ந்த நபர் என முறைகேடாக இரும்பாலையில் பணியில் சேர்ந்துள்ளதாகவும், திமுகவிற்கு கொள்கை பரப்புச் செயலாளர் போல பணியாற்றி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ள பாஜக நிர்வாகிகள் அவர் மீது இரும்பாலை நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லையெனில் இரும்பாலை வளாகம் முன்பு பாஜக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.