இந்தியா

பேரறிவாளன் விடுதலையில் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிய 'மாரு ராம் வழக்கு' - முழு விபரங்கள்

பேரறிவாளன் விடுதலையில் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிய 'மாரு ராம் வழக்கு' - முழு விபரங்கள்

சங்கீதா

பேரறிவாளனை விடுதலை செய்யும் தனது தீர்ப்பில் உச்சநீதிமன்றம் மாரு ராம் என்ற வழக்கின் தீர்ப்பை சுட்டிக்காட்டி உள்ளது. அது என்ன வழக்கு, பேரறிவாளன் விடுதலைக்கும், இதற்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை பார்க்கலாம்.

Maru Ram vs Union of india 1980 இதுதான் அந்த வழக்கின் பெயர். இது ஒரு குற்றவாளிக்கு கருணை காட்டும் குடியரசு தலைவருடைய அதிகாரம் குறித்து பேசக்கூடிய வழக்காகும்.

அரசியல் சாசன பிரிவு 72 இன் கீழ் மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக ஒருவர் குற்றம் இழைத்து தண்டனை பெற்று இருந்தாலும், இராணுவ நீதிமன்றத்தால் தண்டனை பெற்று இருந்தாலும் மற்றும் மரணதண்டனை குற்றவாளிகளுக்கும் அவர்களுடைய தண்டனையை குறைக்கும் அதிகாரத்தை குடியரசுத் தலைவருக்கு வழங்குகிறது.

இந்த அதிகாரத்தை பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஒருவருக்கு மன்னிப்போ அல்லது தண்டனையை நீக்குவதும் அல்லது இடை காலமாக நிறுத்தி வைக்கவோ அல்லது வேறு ஒரு தண்டனையாக மாற்றுவதற்கு அல்லது குறிப்பிட்ட கால அவகாசம் வழங்குவதற்கும் அதிகாரங்களை வழங்குகிறது.

இதன்படி ஒருவருடைய தண்டனையை முழுமையாக ரத்து செய்து அவருக்கு கருணையை வழங்க முடியும் அல்லது ஒருவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை குறைத்து வழங்க முடியும். அதாவது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவது போல.

மற்றொன்று விதிக்கப்பட்ட தண்டனைக்கான ஆண்டுகளை குறைத்து வழங்கவும் அல்லது ஏதாவது ஒரு முக்கிய காரணங்களுக்காக தண்டனையை இடை காலமாக நிறுத்தி வைக்கவும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.

இதற்காக குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்கள் அனுப்பி வைக்கப்படும் பொழுது அது மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழியாக மட்டுமே அனுப்பி வைக்கப்பட வேண்டும். பிறகு சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கத்துடனும் கலந்தாலோசிக்க வேண்டும். இவ்வாறு கலந்தாலோசித்து அதற்குப் பிறகு உள்துறை அமைச்சகத்தால் பரிந்துரை செய்யப்பட்டு அந்த பரிந்துரையின் அடிப்படையில் குடியரசு தலைவர் முடிவெடுக்க வேண்டும்.

இதனை தான் மாறு ராம் வழக்கு மிகத் தெளிவாக விளக்கி இருந்தது. உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கிய இந்த வழக்கின் தீர்ப்பின்படி அரசியல் சாசன பிரிவு 72 பயன்படுத்தி குடியரசுத் தலைவர் கருணை காட்டும் பொழுது, மத்திய அரசாங்கத்தின் அறிவுரையை பெற்று அதன்படி நடக்க வேண்டுமே தவிர தனது சொந்த யோசனையின் படி குடியரசுத்தலைவர் நடக்க முடியாது என தெளிவுபடுத்தி இருந்தது அதாவது அரசாங்கத்துடன் முடிவிற்கு குடியரசுத் தலைவர் கட்டுப்பட்டவர் ஆகிறார்.

இதே சட்டப்பிரிவை பேரறிவாளன் விவகாரத்தில் பொருத்திப் பார்த்து ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவிற்கு கட்டுப்பட்டவர் என்ற முக்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.

- டெல்லியிலிருந்து நிரஞ்சன்