இந்தியா

பேடிஎம் தகவல்களை திருடி ரூ.20 கோடி பேரம்பேசிய கும்பல் கைது

பேடிஎம் தகவல்களை திருடி ரூ.20 கோடி பேரம்பேசிய கும்பல் கைது

webteam

பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மாவிடமிருந்து 20 கோடி ரூபாய் பணம் பறிக்க முயன்ற ஒரு பெண் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இணைய பணப் பரிவர்த்தனைக்கு நிறைய செயலிகள் இருந்தாலும், புகழ்பெற்ற  செயலியாக இருப்பது பேடிஎம். அந்நிறுவனத்தை நிறுவியவர் விஜய் சேகர் சர்மா. இவரிடம் 10 ஆண்டுகளுக்கு மேல் செயலாளராக பணிபுரிந்து வந்தவர் சோனியா தவான். 

இந்நிலையில் சர்மாவின் லேப்டாப்பில்  உள்ள நிறுவனம் சார்ந்த தகவல்களையும், நிறுவனத்தில் கணக்கு வைத்துள்ளவர்களின் தனிப்பட்ட தகவல்களையும் திருடியுள்ளதாக கூறப்படுகிறது. திருடப்பட்ட தகவல்களை கொண்டு சர்மாவை மிரட்டி பணம் பறிக்க சோனியா திட்டமிட்டுள்ளார். இந்தத் திட்டத்திற்கு உதவியாக பேடிஎம் நிறுவனத்தின் ஊழியர்களான  தேவேந்திரகுமார், ரோகித் சோமல் மற்றும் சோனியாவின் கணவர் ரூபக் ஜெயின் ஆகியோர் உதவியுள்ளனர். 

திட்டத்தின் படி பேடிஎமின் நிறுவனர் விஜயின் சகோதரர் அஜய்க்கு தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டல் தொலைபேசி அழைப்பு குறித்து பேசிய அஜய் சேகர் சர்மா, ''எனக்கு செப்டம்பர்  20ம் தேதி மாலை எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய ஒருவர், உங்கள் தகவல்களை திருடியுள்ளதாகவும், அது குறித்த தகவல்களை சொல்ல வேண்டுமென்றால் 10 கோடி ரூபார் தர வேண்டும் என்றும் மிரட்டல் விடுத்தார். அதை நான் பொருட்படுத்தாமல் தவிர்த்துவிட்டேன். 

உடனடியாக எனது சகோதரர், விஜய் சேகர் சர்மாவுக்கு அழைப்பு வந்தது. அவரிடம் ரூ.20 கோடி வேண்டுமென்றும் மிரட்டல் விடுத்தார். முதலில் அவர் குறிப்பிட்ட வங்கி கணக்குக்கு ரூ.2 லட்சம் அனுப்பினோம். தகவல்கள் எப்படி திருடப்பட்டது என அவரிடம் கேட்டோம். அவர் மேற்கொண்டு பணம் கேட்டார். மீண்டும் பணத்தை அனுப்பினோம். தகவல் திருடப்பட்டது எப்படி என்று சொல்லிவிட்டால் நிறைய பணம் தருவதாக கூறினோம். அப்போது தான் அவர் சோனியா தவான், அவரது கணவர் ரூபக் ஜெயின், ஊழியர் தேவேந்திரகுமார் ஆகியோரின் பெயரைக்குறிப்பிட்டார். இந்தத் திட்டத்துக்கு மூளையாக சோனியாவே செயல்பட்டதும் தெரியவந்துள்ளது. அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்'' என்று தெரிவித்தார். 

தொலைபேசியில் மிரட்டல் கொடுத்த ரோகித் சோமல் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் என்பதால், அவரை பிடிக்க உள்ளூர் காவல்துறையின் உதவியை நொய்டா போலீசார் நாடியுள்ளனர்.