தொடங்கியது முதலே மணிப்பூர் விவகாரத்தால் அமளியோடு நடைபெற்று வந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவுபெற்றது. கடந்த ஜூலை 20 ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தன.
இந்த அமளிக்கு இடையே
- டெல்லி அதிகாரிகள் நியமன மசோதா,
- டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்பு மசோதா,
- தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்க குழு அமைக்கும் மசோதா,
- பட்டியல் பழங்குடிகள் குறித்த அரசியல் சாசன திருத்தம் செய்வதற்கான மசோதா,
- ஹிமாச்சல் பழங்குடியினர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான மசோதா,
- உயிரியல் பன்மிய திருத்த மசோதா, கூட்டுறவு சங்கங்களின் திருத்த மசோதா,
- வனபாதுகாப்பு திருத்த மசோதா,
- தேசிய தாதி மற்றும் செவிலித்தாய் ஆணைய மசோதா,
- தேசிய பல்மருத்துவ ஆணைய மசோதா,
- ஜின் விஸ்வாஸ் துணை அம்சங்கள் திருத்த மசோதா,
- காலாவதியான சட்டங்களை ரத்து செய்யும் மசோதா
உட்பட 21 முக்கிய மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியது.
17 அமர்வுகளாக நடைபெற்று வந்த இந்த கூட்டத்தொடரின் முக்கிய அம்சமாக, மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது காரசாரமான விவாதம் நடைபெற்றது. மூன்றாவது நாளாக நடந்த விவாதத்தின் இறுதியில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாற்றினார். பிறகு, குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தொடரில் நிறைவேறிய மசோதாக்கள் என்னென்ன?... என்பதைப்பற்றி செய்தியில் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் விரிவாகப் பார்க்கலாம்.