இந்தியா

மேகதாது அணை விவகாரம் - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பிக்கள் கடும் அமளி

மேகதாது அணை விவகாரம் - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பிக்கள் கடும் அமளி

rajakannan

மேகதாது அணை விவகாரத்தை எழுப்பி அதிமுக எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

பரபரப்பான சூழலுக்கு நடுவே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, மத்திய அமைச்சர் அனந்தகுமார் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்து இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.

இந்த நிலையில் குளிர்கால கூட்டத்தொடரின் 2 ஆம் நாளான இன்று, மாநிலங்களவை கூடியதும், மேகதாது விவகாரத்தை எழுப்பி அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அதேபோல், மாநிலங்களவையிலும் அதிமுக எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை முதலில் 12 மணி வரையும் பின்னர் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது. அதே போல மக்களவையிலும் அதிமுக எம்பிக்கள் மேகதாது விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். 

மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடகம் முயற்சித்து வருகிறது. இந்தத் திட்டத்திற்கான விரிவான அறிக்கை தயார் செய்ய கர்நாடகாவுக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது, இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

ஏற்கனவே கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அவையை நடத்தவிடாமல் அதிமுக எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அதேபோல், இந்தக் கூட்டத் தொடரில் மேகதாது அணை விவகாரத்தை அதிமுக கையிலெடுத்துள்ளது.  

இதனிடையே, பல விவகாரங்களை எழுப்பி பிற கட்சி எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.