மதக்கலவரங்களை தடுக்க நாட்டில் உள்ள அனைத்து மசூதிகளிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்று அகில இந்திய மஜ்லிஜ் முஸ்லிமின் கட்சித் தலைவர் அசாதுதின் ஒவைசி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
டெல்லியிலும், மத்தியப் பிரதேசத்திலும் அண்மையில் மத ரீதியிலான மோதல்கள் நடைபெற்றன. இந்து மத ஊர்வலத்தின்போது ஒருதரப்பினர் கல்வீசி தாக்குதல் நடத்தியதே இந்த வன்முறைக்கு காரணம் எனக் கூறப்பட்டது. யார் முதலில் கல்வீசியது என்பதற்கு எந்த சாட்சியமும் இல்லாததால் ஒருதரப்பினர் மீது காவல்துறையினர் அபாண்டமாக குற்றம்சாட்டுகிறார்கள்.
இனி வருங்காலத்தில் இதுபோன்ற மதக்கலவரங்களை தடுக்க, நாட்டில் உள்ள அனைத்து மசூதிகளிலும் தரமான சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். அப்பொழுதுதான், யார் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள முடியும்.
இதையும் படிக்கலாம்: வங்கக்கடலில் இன்று உருவாகிறது புதிய புயல்... தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு
வெறுப்பு அரசியல்...
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் வழிபாட்டு தலங்கள் அமைந்திருக்கும் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபடுமாறு வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நம் நாட்டில் உள்ள வழிபாட்டுத் தலங்களை தொந்தரவு செய்யக் கூடாது என 1991-ம் ஆண்டிலேயே சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. வாரணாசி நீதிமன்றத்தில் உ.பி. அரசும், மத்திய அரசும் இதனை தெரிவித்திருக்க வேண்டாமா? வெறுப்பு அரசியலை செய்வதற்காகவே அவை நீதிமன்றத்தில் எதையும் தெரிவிக்கவில்லை. இவ்வாறு அசாதுதின் ஒவைசி கூறினார்.