இந்தியா

12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து நாளை எதிர்க்கட்சிகள் பேரணி

12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து நாளை எதிர்க்கட்சிகள் பேரணி

Veeramani

12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து நாளை எதிர்க்கட்சிகள் பேரணி; ஜந்தர் மந்தரில் நாளை மறுநாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 29-ஆம் தேதி தொடங்கியதில் இருந்தே விவசாயிகள் போராட்டம், எம்.எஸ்.பி.க்கு தனிச்சட்டம், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகளை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்பி காங்கிரஸ், தி.மு.க., சிவசேனா உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டத்தொடரின் முதல் வாரத்திலேயே கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் அவைக்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவித்து காங்கிரஸ், சிவசேனா, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் 12 மாநிலங்களவை உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து அவைத்தலைவர் வெங்கையாநாயுடு அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என ஒருபுறம் எதிர்க்கட்சிகளும், மன்னிப்பு கேட்டால் மட்டுமே சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என அரசும் தெரிவித்துள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் செய்து வரும் நிலையிலும் இதுவரை சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறப்படவில்லை. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி சேர்ந்த தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்த ஆலோசனையில் தி.மு.க. மாநிலங்களவை குழுத்தலைவர் திருச்சி சிவா, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி மற்றும் ஆம் ஆத்மி, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 3-வது வாரம் இன்று தொடங்க உள்ள நிலையில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தை எழுப்புவது, விலைவாசி உயர்வு, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை தீவிரப்படுத்தவும், நாளை எதிர்க்கட்சிகளை சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து பேரணியாக விஜய் ஜோக்குக்கு செல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் வருகிற புதன்கிழமை ஜந்தர் மந்தரில் கூட்டாக போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்தப்பேரணி மற்றும் போராட்டத்திற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வேண்டுமென்றே இதுபோன்ற நடவடிக்கையில் எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாகவும் சாடி இருக்கிறது.

-விக்னேஷ்முத்து