மும்பை அருகே நேற்று நடந்த சாலை விபத்தில் டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது விபத்தின் பின்னணி குறித்த முழு விவரங்கள் இப்போது வெளிவந்துள்ளன.
டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி தனது மெர்சிடிஸ் காரில் அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, மகாராஷ்டிராவில் உள்ள பால்கர் என்ற இடத்தில் விபத்துக்குள்ளானர். நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் அவரது கார் எதிர்பாராதவிதமாக டிவைடரில் மோதியது. முதற்கட்ட தகவலாக சூர்யா ஆற்றின் பாலத்தில் இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் விபத்துக்குள்ளான காரில் நான்கு பேர் இருந்ததாகவும், அவர்களில் சைரஸ் மிஸ்திரி உட்பட இருவர் உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
காயம் அடைந்த கார் டிரைவர் உட்பட இருவர் குஜராத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அக்டோபர் 2016 ஆம் ஆண்டு டாடா சன்ஸ் குழும தலைவர் பதவியில் இருந்து முறைகேடு புகார் காரணமாக சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பயணத்தின்போது சைரஸ் மிஸ்திரியுடன், டாடா குழுமத்தின் முன்னாள் இயக்குநர் டௌரியஸ் பண்டோல், அவரது மனைவி அனாஹிதா பண்டோல் மற்றும் சகோதரர் ஜெஹாங்கிர் பண்டோல் பயணித்திருந்துள்ளனர்.
விபத்து தொடர்பாக வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகளில், விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன் அந்தக்கார் சூர்யா ஆற்றின் பாலத்திலிருந்த செக்போஸ்ட்டை நோக்கி அதிவேகமாக சென்றுகொண்டிருந்தது தெரியவந்திருக்கிறது. பின் கார் சாலையின் டிவைடரில் மோதியுள்ளது. இந்த விபத்தில் பின் சீட்டில் அமர்ந்திருந்த சைரஸ் மிஸ்திரி மற்றும் ஜெஹாங்கிர் பண்டோல் உயிரிழந்துள்ளனர். பின் சீட்டில் அமர்ந்திருந்ததால், அவர்கள் சீட் பெல்ட் அணியாமல் இருந்ததாகவும், அதனால் அவர்கள் உயிரிழந்திருப்பதாகவும் காவல்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன் சீட்டில் அமர்ந்திருந்த டௌரியஸ் பண்டோல் மற்றும் அவர் மனைவி அனாஹித்தா பண்டோல் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் உயிர் தப்பித்துள்ளனர். இருப்பினும் அவர்களும் படுகாயம் அடைந்திருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் அப்பகுதியிலிருந்த அனைத்து சிசிடிவி காட்சிகளையும் எடுத்து ஆராய்ந்து வருகின்றனர். மேலும் காரின் பிற பகுதிகளையும் ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர்.
இணையத்தில் இதுதொடர்பான அனிமேஷன் வீடியோக்கள் பதிவுசெய்யப்பட்ட வருகின்றன. பலரும், சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.