கோடை வெயிலில் கடல் வெப்பநிலை உயர்வதால் மன்னார் வளைகுடா பகுதியில் பவளப்பாறைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் பவளப் பாறைகள் அதிகமுள்ள நான்கு முக்கிய பகுதிகளில் மன்னார் வளைகுடாவும் ஒன்று. இங்குள்ள 21 தீவுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் பவளப் பாறை பகுதிகள் அதிகமாக அமைந்துள்ளன. குழி மெல்லுடலிகள் எனப்படும் பவளப் பாறைகள், மீன்கள் உள்ளிட்ட பல்வேறு கடல் வாழ் உயிரினங்களுக்கு முக்கிய உறைவிடமாக உள்ளது. அத்துடன் உணவு மற்றும் இனப்பெருக்கத்துக்கு ஏற்ற இடமாகவும் திகழ்கின்றன.
இந்நிலையில், பருவநிலை மாற்றத்தால் கடல் வெப்பம் உயர்ந்து வருவதால், பவளப் பாறைகள் நிறமிழந்து வெளுத்து வருகின்றன. அதிலும் கடந்த 2 மாதங்களில் வெளிர்தல் அதிகரித்துள்ளதாக கடல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மன்னார் வளைகுடா பகுதியில் 110 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பவளப்பாறைப் பகுதிகள் இருந்தன. ஆனால், கடந்த 50 ஆண்டுகளில் 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பவளப்பாறை பகுதிகள் முற்றிலும் அழிந்து போய்விட்டன. இதனால் பவளப் பாறைகளை பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.