பெண்கள், இன்று அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக முன்னேறி வந்தாலும்கூட, அவர்களுக்கான பாதுகாப்பு என்பதே சில இடங்களில் கேள்விக்குறியாகவே உள்ளது. காவல் துறையின் சேவை, கண்காணிப்பு கேமராக்கள் என இருந்தும், இன்னும் பல பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுவதுதான் பெருங்கொடுமையாக இருக்கிறது. அப்படியான சம்பவம் ஒன்று, தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அந்தப் பெண். நுரையீரல் தொற்று காரணமாக, அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் அந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ உதவியாளர் ஒருவர், இன்று அதிகாலை 4 மணியளவில், அந்தப் பெண் அனுமதிக்கப்பட்டிருந்த ஐசியூ வார்டுக்குள் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இதனால், அந்தப் பெண் கூச்சலிட்டுள்ளார். அவர் கூச்சலிட்டதால், அவருக்கு மயக்க ஊசி செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மயக்கம் தெளிந்த பிறகு தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து அந்த இளம்பெண் தனது கணவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து பெண்ணின் குடும்பத்தார் போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில், அந்த மருத்துவ உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதல்கட்ட விசாரணையில் அவரது பெயர் சிராக் யாதவ் என தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார், சிசிடிவி ஆதாரங்களை கைப்பற்றி மேலும் விசாரணை நடத்திவருகின்றனர்.