இந்தியா

‘பெப்பர் ஸ்பிரே வைத்துகொள்ளுங்கள்’ - பெண் வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

‘பெப்பர் ஸ்பிரே வைத்துகொள்ளுங்கள்’ - பெண் வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

webteam

தெலங்கானாவில் பெண் வட்டாட்சியர்கள் பெப்பர் ஸ்பிரே வைத்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

தெலங்கானா மாநிலத்தில் உள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தின் அப்துல்லாபர்மெத் கிராமத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியராக இருந்தவர் விஜயா. இவரை கடந்த 4ஆம் தேதி அவரது அலுவலகத்தில் வைத்தே சுரேஷ் என்பவர் பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்தார். இந்தச் சம்பவத்தில் வட்டாட்சியர் விஜயா உயிரிழந்தார். அத்துடன், அவரை காப்பாற்ற வந்த டிரைவர் குருநந்தமும், சுரேஷும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் பணியாற்றும் பெண் வட்டாட்சியர்கள் தங்களுடன் பெப்பர் ஸ்பிரே வைத்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து தெலங்கானா மாநில துணை ஆட்சியர்கள் சங்கத்தின் தலைவர் வி லச்சி, டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு பேட்டியளித்துள்ளார். 

அதில், “வட்டாட்சியர் விஜயாவிற்கு ஏற்பட்ட சம்பவம் மிகவும் எதிர்பாராதவிதமானது. இந்தச் சம்பவத்திற்கு பிறகாவது பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ள தேவையான முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். ஆகவே தான் நாங்கள் தெலங்கானா மாநிலத்தில் பணியாற்றும் பெண் துணை ஆட்சியர்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தியுள்ளோம். அத்துடன் அவர்களிடம் பாதுகாப்பிற்காக பெப்பர் ஸ்பிரே வைத்து கொள்ளும்படி அறிவுரை வழங்கியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். 

தெலங்கானா மாநிலத்தில் சுமார் 1000 வட்டாட்சியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 400 பேர் பெண்களாக உள்ளனர். இந்தச் சம்பவத்திற்கு பிறகு தெலங்கானா மாநிலத்திலுள்ள வட்டாட்சியர்கள் சிலர் பல முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.