இந்தியா

பணத்தை ருசி பார்த்த எலி: எஸ்பிஐ அலட்சியத்தால் ரூ.12 லட்சம் காலி

பணத்தை ருசி பார்த்த எலி: எஸ்பிஐ அலட்சியத்தால் ரூ.12 லட்சம் காலி

webteam

அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில் உள்ளது லாய்புலி. இங்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் ஒன்று உள்ளது. ஏடிஎம், வங்கிக்கானது என்றாலும் அதில் பணம் நிரப்புவது தனியார் நிறுவனம். இந்த ஏடிஎம்மில் எப்.ஐ.எஸ்: குளோபல் ( FIS: Global Business Solutions) பிசினஸ் சொலுயூசன்ஸ் நிறுவனம் கடந்த மாதம் 19-ம் தேதி 29 லட்சம் ரூபாயை வைத்தது. அதற்கு மறுநாள், ஏடிஎம் மெ ஷினுக்குள் நுழைந்தது, எலி ஒன்று. கரன்சி நோட்டுகளின் வாசனை அதை இழுத்ததோ என்னவோ? உள்ளே உட்கார்ந்து வேலை மெனக் கெட்டு ஒவ்வொன்றையாகக் குதறித் தள்ளியிருக்கிறது. குறிப்பிட்ட அளவுக்குக் குதறிவிட்டு ’இப்போதைக்கு போதும், அடுத்தாப்ல வைக்கும் போது பார்த்துக்கலாம்’ என்று எஸ்கேப் ஆகிவிட்டது. 

இதனால் ஏடிஎம் மெஷின் ரிப்பேர். இதுபற்றி வங்கி நிர்வாகம் புகார் அளிக்க, அதை சரி செய்வதற்கான ஆட்கள், கடந்த 11-ம் தேதிதான் வந்தார்கள். மெஷினைத் திறந்தால் அவர்களுக்கு அதிர்ச்சி. பாதி திறக்கும் முன்பே, துண்டு துண்டாக கிழிந்த நிலையில்  விழுந்திருக்கிறது ரூபாய் நோட்டுகள். அவ்வளவும் இரண்டாயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகள்.

என்ன செய்வதென்று தெரியவில்லை ரிப்பேர் பார்க்க வந்தவருக்கு. வங்கியில் புகார் சொன்னார். அவர்களும் வந்து பார்த்துவிட்டு, மற்ற ரூபாய் நோட்டுகளை எண்ணினர். ‘17 லட்சம் ரூபாயை காப்பாற்றிவிட்டோம். 12 லட்சத்து 38 ஆயிரம் ரூபாயை குதறித் தள்ளியிருக்கிறது எலி’ என்று  தெரிவித்துள்ளனர். 

’மே 20-ம் தேதியில் இருந்தே, ஏடிஎம் வேலை செய்யவில்லை. ஆனால் ஜூன் 11-ம் தேதிதான் சரி செய்ய வந்துள்ளார். உண்மையிலேயே என்ன நடந்தது என்பது தெரியவில்லை. இது எலி வேலைதானா?’ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளனர் சிலர்.

இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.